சென்னை: திமுகவின் மாநில வர்த்தகர் அணி இணை செயலாளரான ஜெயன் திமுகவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் நெருக்கமான வட்டாரத்தில் வலம் வந்தவர், திடீரென விலகி இருப்பது கட்சியினர் இடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இந்த நிலையில் ஜெயன் பதவி விலகலுக்கான காரணம் என்ன என விசாரித்த போது சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர் திண்டுக்கல் திமுக உடன்பிறப்புகள்..
2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை இழந்து இருக்கிறது. இருந்தபோதும் அந்த கட்சி வலுவாகவே இருக்கிறது. ஆனால் எதிர் முகாமான அதிமுகவில் நிலைமை படும் மோசம். முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஒன்றிய செயலாளர்கள் என பலர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
அதே நேரத்தில் திமுகவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர். தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட சில முக்கிய புள்ளிகள் விலகிய நிலையில் தற்போது அடுத்த அதிர்ச்சியாக திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளரான திண்டுக்கல் ஜெயன் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அறிக்கையில்," கடந்த 35 ஆண்டுகளாக நான் இணைந்து பயணித்து வந்த திமுகவில் எனக்கு வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் கனத்த இதயத்துடனும், மிகுந்த மன வருத்தத்துடனும் விலகி கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக எனக்கு கட்சிப்பணியாற்றும் வாய்ப்பினை வழங்கிய கட்சியின் தலைவருக்கும், துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியினையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். ஜெயனின் அறிவிப்பு திண்டுக்கல் திமுக மட்டுமல்லாது வர்த்தக அணி வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ஏன் ஜெயன் திமுகவிலிருந்து விலகினார்? என விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன. அதற்கு முன் ஜெயன் யார்? என பார்த்து விடலாம்.. திண்டுக்கல்லின் முக்கியமான தொழிலதிபதிகளில் ஒருவர் ஜெயன். பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். ராணுவத்தில் பணியாற்றிய அவர் பின்னர் மத்திய அரசின் எல்ஐசி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். திமுகவில் சேர்வதற்காக அந்தப் பதவியை ராஜினாமா செய்தார் தொடர்ந்து. அப்போது அமைச்சராகவும் திண்டுக்கல் மாவட்ட செயலாளராகவும் இருந்த ஐ.பெரியசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். ஐ.பெரியசாமி உடனான நெருக்கத்தால் அவருக்கு மாநில அளவிலான பொறுப்பு கிடைத்தது. திமுகவின் முக்கிய அணிகளில் ஒன்றான வர்த்தக அணியின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டார். திண்டுக்கல்லை தாண்டியும் பல்வேறு தேர்தலில் திமுக அவரை பயன்படுத்திக் கொண்டது. சமுதாய ஆதரவும் அவருக்கு பக்கபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. போடி, கம்பம் உள்ளிட்ட தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். கடந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில் கம்பம் தொகுதியின் மேலிட பொறுப்பாளராக ஜெயன் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. தொழில்துறை வட்டாரங்களிலும் அவருக்கு நட்பு வட்டாரம் பெரிது. இப்படி பல ஆண்டுகளாக திமுகவின் முக்கிய புள்ளிகளில் ஒருவராக வளம் வந்தவர் ஐ.பெரியசாமி உடனான நெருக்கத்தால் தலைமையின் கவனத்தையும் பெற்றிருந்தார். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக திண்டுக்கல் திமுகவில் அவரை 'சில புள்ளிகள்' ஓரம் கட்டி வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்த ஐ.பெரியசாமி திமுக துணை பொது செயலாளர் நியமனம் செய்யப்பட்டார். அப்போது திண்டுக்கல் மாவட்டம் 2 ஆகப் பிரிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் சக்கரபாணியும் தற்போது திண்டுக்கல் எம்எல்ஏவுமான செந்தில்குமார் இரு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டனர். பின்னர் அரசியல் ஆட்டம் சூடுபிடித்தது. இரு மாவட்ட செயலாளர்களின் ஆதரவாளர்களும் ஜெயனை ஓரம் கட்டம் கட்ட தொடங்கினர். இதனால் அதிர்ச்சியில் இருந்த ஜெயன், ஐ.பெரியசாமிக்காகவே கட்சியில் தொடர்ந்து வந்தார். முன்னரே சொன்னது போல் தேனி மாவட்டத்திலும் தேர்தல் பணியாற்றினார். 30 ஆண்டுகளாக ஐ.பெரியசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்த தன்னையே இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஓரம் கட்டுகிறார்களே என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூட சொல்லாமல் மனப் புழுக்கத்தில் இருந்தாராம் ஜெயன். மாநகராட்சி தேர்தலின் போது அந்த விரிசல் அதிகமானது. அதற்குப் பிறகும் கட்சி நிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு பங்கேற்று வந்தார். ஆனால் ஐ.பெரியசாமிக்கும் அவருக்குமான நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியது. தனது தீவிர ஆதரவாளராக இருந்துவிட்டு ஏன் ஒதுங்கி இருக்கிறார் என ஐ.பெரியசாமி கூட கேட்கவில்லையாம். 2026 சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியிலும் கம்பம் தொகுதியிலும் மாறி மாறி பணியாற்றியும் தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.. தான் ஏன் ஒரம் கட்டப்படுகிறேன் என்ற பதில் கூட கிடைக்கவில்லை. 30 ஆண்டு காலம் அரசியலில் பயணித்த ஐ.பெரியசாமியும் கண்டுகொள்ளவில்லை என்பதால் தான் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார் ஜெயன் என்கின்றனர். அதே நேரத்தில் வேறு எந்த கட்சியிலும் இணைய மாட்டார் என்றும் சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.CJP-ஐ ஒடுக்க பிரிடிஷ் சட்டத்தை பயன்படுத்தும் மத்திய அரசு? சவுரவ் தாஸ் கைதுக்கு பின்னால் நடந்த கேம்!