சிங்கப்பெருமாள் கோவில், ஜிஎஸ்டி சாலையில் ஹெவி டிராபிக்! வண்டலூர், பொத்தேரியில் வாகன ஓட்டிகள் தவிப்பு
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமானோர் புறப்பட்டுள்ளதால், ஜிஎஸ்டி சாலையில் பயங்கரமான டிராபிக் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வண்டலூர், பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் பல கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. கிண்டி முதல் செங்கல்பட்டு வரை போவதற்கே, 2 முதல் 3 மணி நேரத்திற்கும் மேலாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது... இதனால் கார்களில் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்..!!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நேற்று ஒரே நாளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் சுமார் 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். இதில் அரசு பஸ்களில மட்டும் 1.40 லட்சம் பேரும், தனியார் ஆம்னி பஸ்களில் 60 ஆயிரம் பேரும் பயணம் செய்துள்ளனர்.
கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி ரோடு
பயணிகள் கூட்டம் மற்றும் பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நள்ளிரவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், பேருந்துகள் தாமதமின்றி இயக்கப்படுகின்றனவா என்றும் கேட்டறிந்தார்.
தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குக் கார்களிலும், பைக்குகளிலும் புறப்பட்டுச் செல்வதால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கிண்டி ரோடு பயங்கர டிராபிக்
குறிப்பாக, கிண்டி, ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், கிளாம்பாக்கம், சிங்கப்பெருமாள் கோவில், ஊரப்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. கிண்டியில் இருந்து தாம்பரம் செல்வதற்கே ஒன்றரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகிறது.
தாம்பரத்தில் இருந்து வண்டலூர் செல்வதற்கு ஒரு மணி நேரம் தேவைப்படுகிறது. அதேபோல், சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கும் மேலாகிறது. இதனால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சிங்கப்பெருமாள் கோவிலில் 3 கி.மீ. நெரிசல்
இதனிடையே, செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீபாவளியை சொந்த ஊர்களில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து ஏராளமானோர் கிளம்பி செல்வதால்,சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கார்கள், வேன்கள், பைக்குகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்வதால், சாலையில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து செல்கின்றன.
அதேபோல பொத்தேரி முதல் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள் வரை சுமார் 3 கி.மீ. தூரத்திற்கும் அதிகமாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அந்த பகுதியைக் கடந்து செல்ல வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கிளாம்பாக்கம் முதல் ஜிஎஸ்டி சாலை வரையிலான பகுதிகளில் போக்குவரத்தை சீரமைக்க 500-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயணிகள் பாதுகாப்பாக செல்வதற்கும், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
5431 ஸ்பெஷல் பஸ்கள்
தீபாவளி பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், சிஎம்டிஏ காலநிலை பூங்கா மற்றும் மறைமலைநகர் ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நேற்று திட்டமிட்டதைவிட கூடுதலாக 1,018 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, மொத்தம் 3,209 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இன்று 2,191 வழக்கமான பேருந்துகளுடன் 3,240 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 5,431 பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பஸ் வசதி இல்லாத கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 9 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை தொடங்கியுள்ளதால், இன்று சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது..!!




Click it and Unblock the Notifications
