சென்னை: டிரைவிங் லைசென்ஸ் எடுக்க நினைப்பவர்கள் முதல் ஏற்கெனவே லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் வரை பலருக்கும் முக்கியமான மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லைசென்ஸ் தேர்வில் எடுக்க வேண்டிய மதிப்பெண், முகவரி மாற்றம், தேவையான ஆவணங்கள் என பல விஷயங்களில் புதிய விதிகள் வர வாய்ப்புள்ளது. இதில் சில சேவைகளுக்கான கட்டணத்தை நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.. அதை பற்றியெல்லாம் இங்கே விரிவாக பார்ப்போம்..!!
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் டிரைவிங் லைசென்ஸ் தொடர்பான வரைவு விதிகளை முன்மொழிந்துள்ளது. அந்த வரைவு விதிகளில் இடம்பெற்றுள்ள முக்கிய மாற்றங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
பாதுகாப்பான வாகன ஓட்டுதல் தொடர்பான பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோல், பாதுகாப்பான வாகன ஓட்டுதல் தொடர்பான பயிற்சி குறைந்தது 30 நிமிடங்கள் நடைபெற வேண்டும் என்றும் வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் அங்கீகாரத்தின் மூலம் ஆன்லைனில் பெறப்படும் குறிப்பிட்ட ஓட்டுநர் உரிம சேவைகளுக்கான கட்டணத்தை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநர் உரிமத்தில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றுவதற்கான கட்டணங்களையும் ரத்து செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. டிரைவிங் லைசென்ஸில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றுவதற்காக விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். முகவரி மாற்றத்துக்காக விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அது பரிசீலிக்கப்படாவிட்டால், அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதப்படும் என்றும் வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரைவிங் லைசென்ஸ் தொடர்பான சேவைகளுக்கு ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை அடையாளம் மற்றும் வயதுச் சான்றுகளாக ஏற்க முன்மொழியப்பட்டுள்ளது. முகவரி சான்றாக, 3 மாதங்களுக்கு மிகாத மின்சாரக் கட்டண ரசீது மற்றும் சமையல் எரிவாயுக் கட்டண ரசீதுகளை ஏற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ஆயுள் காப்பீட்டுப் பாலிசியை முகவரி சான்றாக ஏற்கக் கூடாது என வரைவு விதிகளில் கறாராக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, ஓட்டுநர் உரிமத்தில் இருந்து ஒரு வாகன வகையை நீக்கக் கோரி விண்ணப்பித்தால், அடுத்த 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது... ஒரு வாகன வகையை நிரந்தரமாக நீக்கியவர்கள், அடுத்த ஒரு வருடத்துக்கு அதே வகைக்கான பழகுநர் உரிமம் அல்லது ஓட்டுநர் உரிமம் பெற முடியாது என்றும் வரைவு விதிகள் கூறுகின்றன. அனைத்துக்கும் மேலாக, ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல், நகல் உரிமம் பெறுதல், புதிய வாகன வகையை சேர்த்தல் உள்ளிட்ட சேவைகளுக்கு ஒருங்கிணைந்த விண்ணப்ப படிவத்தை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரைவு விதிகள் தொடர்பாக பொதுமக்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் 30 நாட்களுக்குள் தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம் என்றெல்லாம் வரைவு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.. இந்த வரைவு விதிகள் தொடர்பாக பொதுமக்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் 30 நாட்களுக்குள் தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம். அவற்றைப் பரிசீலித்த பிறகு இறுதி அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால், இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தால், டிரைவிங் லைசென்ஸ் தேர்வு முதல் முகவரி மாற்றம், கட்டணம் செலுத்துவது வரை பல நடைமுறைகளில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக, லைசென்ஸ் தொடர்பான சேவைகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி என்னென்ன ஆவணங்கள் தேவை, எந்தெந்த சேவைகளுக்கு கட்டணம் உண்டு என்பதை தெரிந்துகொள்வது முக்கியமாக இருக்கும்...!!லைசென்ஸ் கட்டணம் ரத்தாகுமா?
முகவரி மாற்ற 30 நாள் கெடு
என்னென்ன ஆவணங்கள்
ஒரே விண்ணப்பப் படிவம்!