பெருமாள் முருகன் கிளப்பிய பூகம்பம்.. திமுக திமுகன்னு சொல்லாதீங்க! விஜய்க்கு கோவி.செழியன் பதில்
சென்னை: அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் வெற்று அறிக்கையை வெளியிட்டு குறுகிய அரசியல் செய்யக் கூடாது என்று முன்னாள் அமைச்சரும் திமுக சட்டமன்றக் கொறடாவுமான கோவி.செழியன் கூறியுள்ளார்.. பெரியார் அறிவுலகப் புத்தக முறைகேடு விவகாரம் குறித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் கோவி செழியன், வழக்கம்போல் திமுக, திமுக என்று சொல்லாமல், சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கோவை பெரியார் நூலகம்
குறிப்பாக, நூல் கொள்முதலில் அரசு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், தரமற்ற மற்றும் போலியான நூல்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரமானது, தமிழக அரசியல் வட்டாரத்திலும் விவாதத்தையும், சலசலப்பையும் உண்டு பண்ணி வருகிறது. பெரியார் அறிவுலகத்தில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நூல் கொள்முதல் முறைகேடு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், முன்னாள் அமைச்சரும் திமுக சட்டமன்றக் கொறடாவுமான கோவி.செழியன் தவெக அரசுக்கு சில கேள்விகளை எழுப்பி, தனது கண்டனத்தையும் காட்டமாக பதிவு செய்துள்ளார்.
கோவி செழியன் நறுக் கேள்வி
"கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்கள் தவறான தகவல்களையும் - பிழையான வரலாற்றையும் உள்ளடக்கியதாக இருப்பதையும், அப்புத்தகங்களின் வெளியீட்டாளர்கள் மற்றும் அதன் எழுத்தாளர்களின் பெயர் மற்றும் முகவரிகள் போலியாக இருப்பதையும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் தான் எழுதிய கட்டுரை ஒன்றில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். இதை தங்களது அரசியல் அருவெறுப்புக்கு பயன்படுத்தப் பார்க்கிறது த.வெ.க.
எதற்கெடுத்தாலும் தி.மு.க.வைக் குற்றம் சொல்லியே பழக்கப்பட்ட த.வெ.க. அரசைச் சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் - தி.மு.க. மீது புழுதி வாரி இறைப்பதற்கென்றே செயல்படும் அக்கட்சியின் "Virtual Abusers" கூட்டமும், வழக்கம்போல் பழியைத் தூக்கி தி.மு.க. மீது போட்டுவிடலாம் என்று செயல்பட்டனர்.
இதில் அதிர்ச்சியான ஆச்சர்யம் என்ன என்றால், இதுவரை சட்டம்-ஒழுங்கு, விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட எந்தப் பிரச்சினைக்கும் வாய்த்திறக்காத முதலமைச்சரும் அதிசயமாய் அறிக்கை வெளியிட்டுள்ளார்; மக்களைத் திசைத்திருப்ப இது பயன்படும் என்ற நப்பாசையால்!
அவதூறு பரப்பும் தவெகவினர்
முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு, நொடிப்பொழுதில் அரசின் அத்தனை ஆவணங்களையும் ஆய்வு செய்யும் அதிகாரத்தையும் கொண்டுள்ள திரு. விஜய் அவர்கள், பெரியார் அறிவுலகப் புத்தகங்கள் வாங்கியது தொடர்பான சர்ச்சை வெளியானதும் அது குறித்து முறையாக ஆய்வு செய்திருக்க வேண்டும். அதை அவர் பொறுப்புடன் செய்ததாகத் தெரியவில்லை.
நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்கள் தரமானவையாக இருக்க வேண்டும் - அவற்றில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என, "வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கையை" முதலில் உருவாக்கியதே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை மறைத்துவிட்டு த.வெ.க.வினர் பரப்புவது அவதூறு மட்டுமே.
திமுக ஆட்சியில் குறையா?
கோவையில் அமையவுள்ள மாபெரும் நூலகத்தில் தரமான நூல்கள் இடபெற வேண்டும் என மதிப்புமிக்க எழுத்தாளர்களையும் - கல்வியாளர்களையும் உள்ளடக்கிய நூல் பரிந்துரைக் குழுவினை கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைத்தோம். புத்தக முறைகேட்டை வெளிகொண்டுவந்த கட்டுரையை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களே, அந்த நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்தான்.
தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான நூலகங்களை உருவாக்கி, இந்திய ஒன்றியமே வியந்து பார்க்கும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட நூலகங்களை அமைத்த தி.மு.க.வின் திட்டங்களில் இதற்குமுன் இப்படிப்பட்ட குறைகள் ஏதாவது எழுந்துள்ளனவா?
சதிச் செயல்கள்
ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தி.மு.க.வின் திட்டங்களைச் சிதைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் த.வெ.க. ஆட்சியில் இத்தகைய செய்தி வந்திருப்பதால், இதில் உள்நோக்கம் ஏதும் உள்ளதோ, சதிச் செயல்கள் ஏதும் உள்ளனவோ என்று கருத வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட புத்தகங்கள், அதனை எழுதிய எழுத்தாளர்கள், அனுமதி பெற்ற பதிப்பகங்கள் ஆகியவற்றின் பின்னணி வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.
எனவே, வழக்கம் போல் தி.மு.க. தி.மு.க. என்று சொல்லாமல், சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை அவசியம் என்பதே தி.மு.கழகத்தின் நிலைப்பாடு" என்று அதிரடியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.




Click it and Unblock the Notifications
