தீபாவளி ரெய்டு: 45+ இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனை.. சிக்கிய ரூ.1.59 கோடி!

  • சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று, 45 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில், ரூ.1.59 கோடி சிக்கியது. கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.8.21 லட்சம் மற்றும் G-Pay பரிவர்த்தனைகள் ரூ.1.50 கோடி கண்டறியப்பட்டது.

    Advertisement

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனைகள் காரணாமக அரசு அலுவலகங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.

    Advertisement

    வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. தொடர் புகார்களின் எதிரொலியாக நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் சுமார் 45க்கும் மேற்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனி குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னையில் மயிலாப்பூர், அடையாறு பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சோதனை நடத்தினர். புதுக்கோட்டை நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலகத்தில் நுழைந்த அதிகாரிகள் அங்குள்ளோரிடம் விசாரணை நடத்தினர்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி அலுவலகம், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி அலுவலகம், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, ஈரோடு நகர் ஊரமைப்பு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    Advertisement

    மதுரை மேலூர், தேனி சின்னமனூர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், வேலூர், சேலம், தருமபுரி, நாமக்கல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

    நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்குள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பல்வேறு ஊர்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் சிக்கி உள்ளன.

    மாநகராட்சி, நகராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் இந்தச் சோதனை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தச் சோதனையின்போது, கணக்கில் காட்டப்படாத ரூ.8.21 லட்சம் ரொக்கம் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சந்தேகத்திற்கிடமான வகையில் சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான G-pay பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

    அரசு அலுவலகங்களில் நடைபெற்ற இந்தச் சோதனைகள் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English Summary

    Across Tamil Nadu, raids conducted yesterday by the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) at 45 Block Development Offices, as well as various municipal corporation and municipal offices, led to the seizure of Rs. 1.59 crore. This included Rs. 8.21 lakh in unaccounted cash and Rs. 1.50 crore in G-Pay transactions.