புறம்போக்கு மின் இணைப்பு.. நீர்நிலை, மேய்க்கால், மந்தைவெளி, வனத்துறை நிலம் உள்ளவர்களா நீங்கள்?

  • சென்னை: புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்குத் தடையில்லா சான்றின்றி மின் இணைப்பு வழங்கக் கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்குள் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மட்டும், அதிகாரிகளின் தடையில்லா சான்று இன்றி வீட்டு உபயோக மின் இணைப்பு தராலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. நீர்நிலை, மேய்க்கால், மந்தைவெளி, வனத்துறை நிலங்களில் வாழ்பவர்கள் அறிய வேண்டிய விஷயத்தையும் பார்ப்போம்.

    Advertisement


    250 சதுர அடி வீடுகளுக்கு மட்டுமே அனுமதி

    தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் அனில் மேஷ்ராம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறுகையில், "புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்குத் தடையில்லா சான்றின்றி மின் இணைப்பு வழங்கக் கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்குள் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மட்டும், அதிகாரிகளின் தடையில்லா சான்று இன்றி வீட்டு உபயோக மின் இணைப்பு வழங்க மின் வாரியத் தலைவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    Advertisement


    மேய்க்கால், வனத்துறை, கோயில் நிலத்திற்கு வாய்ப்பே இல்லை

    எனினும், நீர்நிலை, மேய்க்கால், மந்தைவெளி, வனத்துறை நிலங்கள், மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள், ரயில்வே நிலங்கள், அனைத்து மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோவில் புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளுக்கு இச்சலுகை பொருந்தாது (இவர்களுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது). புறம்போக்கு நிலங்களில் உள்ள வீட்டு இணைப்புகள் 'குறைந்த அழுத்த மின் கட்டணம் ஐஐ (3) - புறம்போக்கு' பிரிவில் வகைப்படுத்தப்பட்டு, சாதாரண வீட்டு உபயோக கட்டணமே வசூலிக்கப்படும்.

    உறுதிமொழி பத்திரம் அவசியம்

    விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் பகிர்மான விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள 'படிவம் 1'-ஐ பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 'படிவம் 6' (பின் இணைப்பு III)-ல் இழப்பீட்டு பத்திரம் வழங்குவதோடு, வழக்கமான பாதுகாப்பு வைப்புத் தொகையை விட இரு மடங்கு தொகையை செலுத்த வேண்டும். மின் இணைப்பு வழங்குவதற்கான அனைத்து கட்டணங்களும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி விண்ணப்பதாரரிடம் இருந்து வசூலிக்கப்படும்.

    மின் இணைப்பு : நில உரிமை கோர முடியாது

    விண்ணப்பதாரர்கள் நீதித்துறை சாராத முத்திரைத்தாளில் ஒரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அதில், அரசுக்கு நிலம் தேவைப்படும்போதோ அல்லது எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படும்போதோ, எந்த நேரத்திலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும், நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவோம் என்றும் தெரிந்தே விண்ணப்பிப்பதாக கூற வேண்டும். இந்த மின் இணைப்பு பெறுவதன் மூலம், நிலத்தின் மீது எந்தவிதமான நிரந்தர உரிமையோ அல்லது முழு உரிமையோ கோர முடியாது. தாங்கள் குடியிருக்கும் வீடு தடை செய்யப்பட்ட நீர்நிலை, மேய்க்கால், மந்தைவெளி உள்ளிட்ட புறம்போக்கு நிலங்களில் இல்லை என்றும் அந்த உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட வேண்டும்.

    Advertisement

    இந்த திட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், தாலுகா மற்றும் மாவட்ட வாரியாக எத்தனை பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற விரிவான அறிக்கையை 3 மாதங்களுக்கு ஒருமுறை வாரியத் தலைவர் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மக்கள் அறிய வேண்டியவை

    அரசின் இந்த அறிவிப்பினை பார்க்கும் போது, நீர்நிலை, மேய்க்கால், மந்தைவெளி, வனத்துறை நிலங்கள், மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள், ரயில்வே நிலங்கள் மற்றும் கோயில் நிலங்களில் வீடு கட்டியவர்களுக்கு மின் இணைப்பு எந்த காலத்திலும் கிடைக்காது. அதேபோல் புறப்போக்கு நிலமாக இருந்தாலும், அந்த நிலத்திற்கு உரிமை கோர முடியாது. அந்த நிலத்தை எப்போது அரசு கேட்டாலும் கண்டிப்பாக திரும்ப தருவோம் என்ற உத்தரவாதம் தந்து உறுதிமொழி பத்திரம் தந்தால் தான், மின் இணைப்பு கிடைக்கும்.

    English Summary

    Tamil Nadu Government's clarification regarding obtaining electricity connections for houses built on poramboke* land without an NOC. Do you own land classified as a water body, grazing land, communal grazing ground, or Forest Department land?