சென்னை: எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்து தொடர்பாக அதிமுக எம்எல்ஏ எடப்பாடி பழனிசாமி, பாமக எம்.எல்.ஏ கணேஷ், திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அதற்கு பதில் அளித்துப் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணம் அல்ல எனத் தெரிவித்தார்.
இன்று தமிழக சட்டசபையில் அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். எண்ணூர் முகத்துவாரத்தில் கொத்து கொத்தாக மீன்கள் இறந்து மிதக்கின்றன. கழிவுகள் ஆற்றில் கலப்பதால் மீன்கள் இறக்கின்றன. மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து பேசிய பாமக எம்எல்ஏ கணேஷ், கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதப்பது இது முதல்முறை அல்ல. சுற்றுச்சூழலை பாதிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து எண்ணூர் முகத்துவாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, சென்னையின் ஜீவாதாரமாக விளங்கும் வடசென்னை கொசஸ்தலை ஆறு மற்றும் அதன் முகத்துவாரப் பகுதிகள், தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால் தொடர்ந்து மாசடைந்து வருகின்றன. ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கையாகிவிட்டதால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். பல்வேறு காரணங்களால் கொசஸ்தலை ஆறு மாசடைகிறது. மீன்கள் சொத்து மிதக்கும் அளவுக்கு மாசு அதிகரித்து காணப்படுகிறது, எனவே, கொசஸ்தலை ஆற்றுப் பகுதியைச் சூழலியல் மண்டலமாக அறிவித்து, அரசு உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து, இந்த விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் ராஜீவ், குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் 10 நாட்களில் அறிக்கை பெறப்பட்ட உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் இறந்து கிடப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எண்ணூர் முகத்துவாரம், ரயில்வே பாலம் உள்பட 5 இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். எண்ணூர் முகத்துவாரத்தில் 2,180 கிலோ மீன்கள் இறந்து கிடந்தன. மீன்கள் இறப்பு குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு 10 நாளில் அறிக்கை பெறப்படும். தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மீன்கள் இறந்தது என தெரிய வந்துள்ளது என்று அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்தார். மேலும், எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணம் அல்ல என்றார். மனிதக் கழிவுகள் உள்பட கழிவு நீர் கலப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரியவருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்வே குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராஜீவ் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய பாமக உறுப்பினர் கணேஷ், "எல்லோருக்கும் தெரியும் எதனால் மீன்கள் செத்து மிதப்பது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது என்று, எனவே நீங்கள் இது போல பேசுவது கழிவுநீரை ஆற்றில் கலக்கும் தொழிற்சாலைகளுக்கு மேலும் ஊக்கமளிப்பது போலாகிவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.