தங்க நகை அடகு.. இந்தியன் வங்கி உதவி மேலாளர் செய்த பித்தலாட்டம்.. சிக்கியது எப்படி?

  • சென்னை: சென்னையில் ஒரு இந்தியன் வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தவர் முரளி கிருஷ்ணா. வாடிக்கையாளர்கள் அடமானம் வைக்கும் நகைகளின் பொறுப்பு இவரிடம் இருந்தது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த அடமான நகைகளை திருடி ரூ.3 கோடி சுருட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.. இந்த மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் முரளி கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.

    Advertisement

    சில வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்வதும் நடக்கிறது. அதேபோல் அடகு வைத்த தங்க நகைகளை திருடுவது போன்ற அபூர்வமான சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துள்ளன. சென்னையில நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

    Advertisement

    சென்னை அயனாவரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் மேலாளர் தினேஷ் குமார், சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து கடந்த 13-ந்தேதியன்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், கூறியிருப்பதாவது:-

    எங்கள் வங்கி கிளையில் உதவி மேலாளராக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த 34 வயதாகும் முரளி கிருஷ்ணா என்பவர் பணியாற்றி வந்தார். வாடிக்கையாளர்கள் அடமானம் வைக்கும் நகைகளின் பொறுப்பு இவரிடம் ஒப்படைத்து இருந்தோம். அடமானம் வைக்கப்படும் நகைகளை லாக்கரில் வைத்து பத்திரமாக பூட்டி, அதன் சாவியும் இவரிடம்தான் இருந்தது. வாடிக்கையாளர்கள் நகைகளை மீட்கும்போது, லாக்கரை திறந்து வாடிக்கையாளருக்கு சொந்தமான நகைகளை திருப்பி கொடுப்பதும் இவருடைய பொறுப்பாக இருந்தது. அண்மையில் சில வாடிக்கையாளர்கள் தாங்கள் அடமானம் வைத்த நகைகளை மீட்டு சென்றுவிட்டு சென்றனர். ஆனால் நகையை திருப்பும் போது, அந்த நகைகள் கவரிங் நகைகளாக இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

    Advertisement

    இதுதொடர்பாக விசாரித்தபோது, எங்கள் வங்கியின் உதவி மேலாளர் முரளி கிருஷ்ணா வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகளை திருடிவிட்டு, அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து மிகப்பெரிய அளவில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அந்த வகையில் அவர், 21 வாடிக்கையாளர்களின் நகைகளை திருடிவிட்டு அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டது. 2 கிலோ 179 கிராம் தங்க நகைகளை முரளி கிருஷ்ணா திருடியது தெரியவந்துள்ளது. பின்னர் அந்த நகைகளை வேறு இடங்களில் அவர் அடமானம் வைத்து, பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    அவரது இந்த பித்தலாட்டமான செயலால் எங்கள் அயனாவரம் வங்கி கிளைக்கு சுமார் ரூ.3.9 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் உடனடியாக முரளி கிருஷ்ணா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான முரளி கிருஷ்ணா சென்னை புரசைவாக்கத்தில் தற்போது குடும்பத்தோடு வசித்து வந்தார். அவரது மனைவியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகளை திருடி, மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்ட உதவி மேலாளர் முரளி கிருஷ்ணா நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. திருடிய நகைகளை அவர் எங்கெங்கு அடமானம் வைத்துள்ளார் என்பது பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்தனர். அவற்றை மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    இந்தியன் வங்கி உதவி மேலாளர் முரளி கிருஷ்ணா, ஆன்லைன் வியாபாரத்தில் ஈடுபட்டு பெரிய அளவில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் நகைகளை திருடி, அடகு வைத்து கிடைத்த பணத்தில், ஆடம்பரமாக உல்லாச வாழ்க்கையிலும் அவர் ஈடுபட்டுள்ளாராம். இந்த மோசடியில் அவருடைய மனைவிக்கும் பங்கு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English Summary

    Murali Krishna worked as an Assistant Manager at an Indian Bank branch in Chennai. A complaint has been filed alleging that he misappropriated ₹3 crore by stealing pledged jewelry belonging to customers. Bank Manager Murali Krishna has been arrested in connection with this fraud.