4 வருட காதல்.. திருமணம் செய்யக்கூறிய காதலிக்கு மத்திய ஆயுதப்படை போலீஸ்காரர் கொடுத்த தண்டனை! சோகம்
பெங்களூர்: திருமணம் பற்றி பேசலாம் என்று தனியாக அருவி பகுதிக்கு அழைத்து சென்று 4 ஆண்டு காலமாக காதலித்த காதலியை கழுத்தை நெரித்து கொன்று புதருக்குள் உடலை மறைத்து வைத்த மத்திய ஆயுதப்படை போலீஸ்காரரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் ராய்பாக் தாலுகா ஹருகேரி கிராமத்தை சேர்ந்தவர் ரக்ஷிதா (வயது 25). இவர் அக்டோபர் 28 ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு மீண்டும் வீடு திரும்பிவில்லை.
ரக்ஷிதாவை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். உறவினர்கள், ரக்ஷிதாவின் தோழிகளிடம் விசாரித்தனர். ஆனால் எங்கு தேடியும் ரக்ஷிதா கிடைக்கவில்லை.
இதனால் ரக்ஷிதாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரக்ஷிதாவை தீவிரமாக தேடினர். இதற்கிடையே தான் கோகாக் அருவியின் அருகே உள்ள பள்ளத்தாக்கில் புதருக்குள் பெண் ஒருவரின் உடல் கிடப்பதாக கோகாக் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது அது மாயமான ரக்ஷிதாவின் உடல் என்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது ரக்ஷிதா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தான் ரக்ஷிதாவை அவரது காதலன் பசப்பா சித்தப்பா சாதனவர் என்பவர் கொன்று உடலை மறைத்து வைத்தது தெரியவந்தது. இவர் பெலகாவி மாவட்டம் அதானி தாலுகாஅடலஹட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எஸ்எஸ்பி ஆயுதப்படையில கான்ஸ்டபிளாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. ரக்ஷிதா மற்றும் பசப்பா இருவரும் காதலர்கள். கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
ரக்ஷிதாவை திருமணம் செய்து கொள்வதாக பசப்பா வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் அவர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தொடர்ந்து திருமணத்தை தள்ளிப்போட்டு வந்துள்ளார். இதற்கிடையே தான் ரக்ஷிதாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இதனால் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி ரக்ஷிதா, பசப்பாவிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்தது.
அக்டோபர் 28ம் தேதி திருமணம் தொடர்பாக பேசலாம் என்று பசப்பா, ரக்ஷிதாவை கோகாக் அருவிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பசப்பா, ரக்ஷிதாவை கொன்று புதருக்குள் உடலை மறைத்து வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் உலா வந்த நிலையில் போலீசில் சிக்கியிருப்பது தெரியவந்தது.


Click it and Unblock the Notifications
