கணவனை கொல்ல, தாலி அடகு வைத்து துப்பாக்கி வாங்கிய மனைவி.. 2 காதலர்களுடன் சேர்ந்து 4 முறை சுட்ட கொடுமை
சென்னை: கணவன் மீது கோபம் வந்தால் சண்டை போடுவார்கள்.. சிலர் பிரிந்து சென்றுவிடுவார்கள். ஆனால், ஒடிசாவில் ஒரு பெண் தனது கணவரைக் கொலை செய்ய படுபயங்கரமான திட்டம் போட்டுள்ளார். இதற்காக தனது தாலியையே அடகு வைத்து துப்பாக்கி வாங்கியதுடன், 2 கள்ளக்காதலர்களையும் இந்தத் திட்டத்தில் சேர்த்துள்ளார். கடைசியில் போலீசாரிடம் சிக்கிய அந்த 3 பேரை பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒடிசா மாநிலம் சுபர்ணபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதாம் நாக். இவரது மனைவி கவிதா நாக். இவருக்கும் திரிலோச்சன் பாக் என்ற டிங்குவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. கடந்த ஒரு வருடமாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

2 கள்ளக்காதலர்கள்
இதனிடையே, யுவராஜ் சாஹு என்பவருடனும் கவிதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது. இந்தத் தொடர்பு சுமார் 5 ஆண்டுகளாக நீடித்ததாகக் கூறப்படுகிறது..
மனைவியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சுதாம் நாக், இதுபற்றி அவரைக் கண்டித்துள்ளார். மேலும், திரிலோச்சன் வீட்டுக்கு வரக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையால், கவிதா நாக் எரிச்சலடைந்தார். கணவரை கொல்வது என்று முடிவெடுத்து விட்டார். சுதாம் உயிருடன் இருந்தால் தங்களது உறவுக்கு இடையூறு ஏற்படும் என்று நினைத்து, கொலை திட்டத்தை அரங்கேற்றினார்.

தங்கத் தாலியை கழட்டிய கவிதா
இதற்காக கவிதா தனது தங்கத் தாலியையே கழட்டி, கள்ளக்காதலன் திரிலோச்சனிடம் தந்துள்ளார். அதை வாங்கிக்கொண்ட அவர், நகைக்கடையில் அடகு வைத்து ரூ.45,000 பெற்றுள்ளார்.. அந்தப் பணத்துடன் மேலும் ரூ.15,000 சேர்த்து மொத்தம் ரூ.60,000 கொடுத்து ரூர்கேலாவில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார்.. அதன்படியே அந்த பணத்தை எடுத்துச்சென்று, போன்பே மற்றும் ரொக்கமாக தந்து, துப்பாக்கியை வாங்கி வந்துள்ளார் கள்ளக்காதலன்.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி சுதாம் நாக் தனது பைக்கை ரிப்பேர் செய்வதற்காக டுங்குரிபாலியில் உள்ள மெக்கானிக் கடைக்கு சென்றுள்ளார்... அவரது நடமாட்டத்தை 2வது கள்ளக்காதலன் யுவராஜ் கண்காணித்து, கவிதாவுக்கு தகவல் கொடுத்துள்ளார். கவிதாவும் அந்தத் தகவல்களை வாட்ஸ்அப் அழைப்பு மூலம் முதல் கள்ளக்காதலன் திரிலோச்சனுக்கு உடனுக்குடன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் மீண்டும் துப்பாக்கி சூடு
சுதாம் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது பங்கெல் சாக் அருகே திரிலோச்சன் அவரை வழிமறித்ததுடன், துப்பாக்கியால் 2 முறை சுட்டுள்ளார். இதில் சுதாம் கீழே விழுந்துள்ளார். அப்போதும் விடாமல் அருகிலேயே சென்று மேலும் 2 முறை சுட்டுள்ளார். இதில் சுதாம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கணவர் கொல்லப்பட்ட தகவல் வெளியானதுமே கவிதா போலீசுக்கு ஓடினார்.. அடையாளம் தெரியாத நபர் என்னுடைய கணவரை கொலை செய்துவிட்டதாக கூறி ஒப்பாரி வைத்தார்.. ஆனால், போலீசாரின் விசாரணையில் அவரது புகாரில் சந்தேகம் ஏற்பட்டது. அதனால் கவிதாவின் செல்போன் அழைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், இந்த கொலைக்குப் பின்னால் மனைவியும் அவரது 2 ஆண் நண்பர்களும் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
சுட்டுப்பொசுக்கிய மனைவி
இதையடுத்து கவிதா, திரிலோச்சன், யுவராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கொலைக்குப் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, 6 செல்போன்கள், 2 பைக்குகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கொலைக்கான திட்டம் எப்போது தீட்டப்பட்டது, துப்பாக்கி எங்கிருந்து வாங்கப்பட்டது, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை கொல்ல மனைவியே தாலியை அடகு வைத்து, அதில் துப்பாக்கி வாங்கி சுட்டு பொசுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது..!!




Click it and Unblock the Notifications
