கோவை மக்களுக்கு தவெக ஷாக்.. சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டம் கைக்கழுவல்.. திமுக கனவு திட்டத்தில் மண்
கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கோவைக்கு வளர்ச்சி திட்டங்கள் மிகவும் அவசியமாக உள்ளது. திமுக ஆட்சியில் கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அறிவித்தனர். இதற்கான ஆரம்பகட்ட பணி நடைபெற்றது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அதுகுறித்த எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த திட்டத்தை தவெக கைவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர், குறு சிறு நடுத்தர நிறுவனங்களின் இதயம் என்று கோவைக்கு பல்வேறு அடையாளங்கள் உள்ளன. தொழில்துறை மட்டுமல்லாமல் கோவை மாவட்டம் விளையாட்டுத்துறையிலும் தடம் பதித்து வருகிறது. கோவையை சேர்ந்த வித்யா ராம்ராஜ், ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் பெண்கள் தடை ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானம்
தடகளம், ஹாக்கி, கபடி, கிரிக்கெட் விளையாட்டுகளில் பல்வேறு திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் ஆர்எஸ்புரத்தில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டது. இதேபோல 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். ஒண்டிப்புதுாரில் உள்ள சிறை மைதானம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த நிலம் விளையாட்டு துறைக்கு வகை மாற்றமும் செய்யப்பட்டது. அடுத்தடுத்து மண் பரிசோதனை, அளவீடு பணிகள், வரைபடம் தயாரித்தல், மைதானம் மாதிரி போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 2025 ஜனவரி மாதம் டெண்டர் கோரப்படும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கூறியது. அரசு, தனியார் இணைந்து 30 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் என்று சொல்லப்பட்டது. இதற்கு விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்க டிட்கோ அழைத்தது.
கைவிடுவதாக அறிவிப்பு
மறுபக்கம், ஒண்டிப்புதூரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால், சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. கடந்த அதிமக ஆட்சியில் பாரதியார் பல்கலைக்கழகம் அருகே சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று கூறியிருந்தனர். அதுபோல புறநகர் பகுதியில் மைதானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதனிடையே கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இதனால் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டும் திட்டம் கைவிடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து, விமான நிலையம், பயிற்சி போன்ற பல்வேறு காரணங்களை காட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் கைவிடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
