சார்.. சார்.. திருப்பரங்குன்றத்தில் தீபம் எங்கே ஏத்தப்போறீங்க? மதுரை கலெக்டர் கொடுத்த ரியாக்ஷன்
மதுரை: திருப்பரங்குன்றத்தின் மலை மீதுள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போது வரை தீபம் ஏற்றுவதா? இல்லையா? என்பதை தமிழக அரசு உறுதி செய்யவில்லை. இந்நிலையில் தான் அதுபற்றிய கேள்விக்கு மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா பதிலளிக்காமல் மவுனமாக சென்றார்.

திருப்பரங்குன்றம் மலை மீது பொதுமக்கள் ஏறுவதை தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் சற்று நேரத்துக்கு முன்பு மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா அங்கு சென்றார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான விஷயங்களை அவர் கேட்டறிந்தார். அதன்பிறகு அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டார். இந்த வேளையில் பத்திரிகையாளர்கள் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம், ''சார்.. சார்.. தீபம் எங்கே ஏற்றப்பபோகிறீர்கள்?'' என்று கேள்வி கேட்டனர். ஆனால் நிஷாந்த் கிருஷ்ணா எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர் காரில் ஏறி அமர்ந்தார்.
அப்போது பத்திரிகையாளர்கள், ''சார்.. சார்.. இந்த விஷயத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு'' என்று கூறி பதிலை எதிர்பார்த்தனர். ஆனால் நிஷாந்த் கிருஷ்ணா அதற்கு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் திருப்பரங்குன்றத்தில் இன்று எங்கு தீபம் ஏற்றப்பட உள்ளது? என்பது புரியாத புதிராக உள்ளது.
பொதுவாக கார்த்திகை தீப நாளில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்படும். ஆனால் தற்போது மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் த இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த முறை உயர்நீதிமன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னபோது முந்தைய திமுக தலைமையிலான தமிழக அரசு அதனை நிறைவேற்றவில்லை. இந்த முறை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதனை தற்போது தவெக அரசு நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதுமட்டுமின்றி தீபம் ஏற்றும் உத்தரவையொட்டி நேற்று இரவு 9 மணி முதல் நாளை காலை 10 மணி வரை திருப்பரங்குன்றம் மட்டுமின்றி மொத்த மதுரை மாவட்டத்திலும் பிஎஸ்என்எஸ்எஸ் சட்டப்பிரிவு 163 ன்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய 144 தடை உத்தரவாகும். இந்த தடை உத்தரவை எதிர்த்து இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், நீதிபதி சுமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மதியம் 12.30 மணிக்கு மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து மதியம் 1.15 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டார். தற்போது கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை தொடங்கி நடந்து வருகிறது.
இதற்கிடையே தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து திருப்பரங்குன்றம் வரும் பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் ஆங்காங்கே தடுத்து வைத்து வருகின்றனர். சிலரை வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications
