ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை

  • சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சூழலை சீரமைத்து, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்ச உணர்வைப் போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது. மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகளைக் கட்டுப்படுத்தவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட வாரியாக கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    வளர்ச்சித் திட்டங்களை விட மக்களின் பாதுகாப்பு உணர்வே முக்கியம் என்பதால், தமிழக அரசு சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த விரிவான செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் பெருகும் குற்றங்கள்

    இது தொடர்பாக அப்பேரவையின் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி தமிழக அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், "தமிழகம் சமூக ஒற்றுமை, கல்வி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் அமைதியான வாழ்க்கை முறைக்காக இந்திய அளவில் தனித்த அடையாளம் கொண்ட மாநிலமாக இருந்து வருகிறது.

    ஆனால் சமீபகாலமாக மாநிலத்தின் பல பகுதிகளில் இடம்பெற்று வருகின்றதாக பொதுமக்கள் மத்தியில் பேசப்படும் கொலை, கொள்ளை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நிகழும் குற்றங்கள், போதைப்பொருள் தொடர்பான அச்சங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு குறித்த கவலைகள் - மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்த வேண்டிய தேவை இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.

    Advertisement

    தமிழக அரசுக்கு ஹென்றி கோரிக்கை

    ஒரு அரசு குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல; குற்றம் நடைபெறாமல் தடுக்கும் நிர்வாக திறனையும் வெளிப்படுத்த வேண்டும். மக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக உறங்க வேண்டும்; பெண்கள் அச்சமின்றி இயங்க வேண்டும்; குழந்தைகள் நிம்மதியாக பள்ளி செல்ல வேண்டும்; இளைஞர்கள் போதைச் சூழலிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் - இதுவே நல்லாட்சியின் அடிப்படை அளவுகோல்.

    தமிழக அரசு மற்றும் காவல்துறை அமைப்புகள் இணைந்து, மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம்-ஒழுங்கு நிலையை மீளாய்வு செய்து, அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் உடனடி கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்.

    Advertisement

    மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தனித்த விரைவு நடவடிக்கை முறை உருவாக்க வேண்டும்... போதைப்பொருள் விற்பனை மற்றும் இளைஞர்களை பாதிக்கும் குற்ற வலையமைப்புகளை முற்றிலும் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெண்கள் பாதுகாப்பு அவசியம்

    குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த அடையாள வேறுபாடும் இன்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்... காவல்துறைக்கு தொழில்நுட்ப வசதி, மனிதவளம் மற்றும் செயல்திறன் மேம்பாட்டு ஆதரவு வழங்கப்பட வேண்டும்.. பொதுமக்கள் புகார், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மாவட்ட அளவில் வலுப்படுத்தப்பட வேண்டும்.. சட்டம்-ஒழுங்கு குறித்த அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையாக மக்களுக்கு விளக்கப்பட வேண்டும்.

    Advertisement

    மக்கள் அரசிடம் எதிர்பார்ப்பது வெறும் நிர்வாகம் அல்ல - பாதுகாப்பு உணர்வு. வளர்ச்சி திட்டங்கள் முக்கியம்; ஆனால் பாதுகாப்பு இல்லாத வளர்ச்சி முழுமையல்ல. தமிழகம் மீண்டும் பாதுகாப்பு, ஒழுங்கு மற்றும் மக்கள் நம்பிக்கையின் முன்னோடி மாநிலமாக திகழ அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    எனவே, தமிழக அரசு சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தி, மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் உருவாக்கும் வகையில் விரிவான செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை சார்பில் வலியுறுத்துகிறோம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    English Summary

    Henry Says It Too! “Do This Immediately from Chennai to Kanyakumari” – Strong Appeal to Tamil Nadu Government