சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் லாங் வீக் எண்ட் வரும்போதெல்லாம் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில், பேருந்துகளின் தாமதம் மற்றும் சரியான தகவல் கிடைக்காததால் பயணிகள் குழப்பத்துக்கும், அலைச்சலுக்கும் ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். நேற்றைய தினம் நமக்கும் கிட்டத்தட்ட அதே அனுபவம் தான் கிடைத்தது.
கடந்த சில மாதங்களாகவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பல்வேறு புகார்கள் கிளம்பி வருகிறது. குறிப்பாக லாங வீக் எண்ட்டின் போது போதிய பேருந்துகள் கிடைப்பதில், உரிய தகவல்களை கொடுக்க யாருமே இல்லை என்பது போன்ற புகார்கள் இருந்து கொண்டே இருக்கிறது.
நேற்று செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு இரவு 10.30 மணிக்கு புறப்படும் எஸ்இடிசி ஏசி பேருந்தை நாம் புக் செய்திருந்தோம். லாங் வீக் எண்ட் அக்டோபர் 2ம் தேதி தொடங்கும் நிலையில், வழக்கமா அக்டோபர் 1ம் தேதி தான் கூட்டம் அதிகமாக இருக்கும். வீட்டில் உள்ள வயதானவர்கள் செல்வதால் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ஒரு நாள் முன்தாக செப்டம்பர் 30ம் தேதியே பயணம் செய்ய திட்டமிட்டோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு சென்றபோது பெரிய அளவில் கூட்டம் இல்லை. ஆனால் 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம் பேருந்து 10.30 மணி கடந்தும் வரவில்லை. பொதுவாக முன்பதிவு செய்யப்பட்ட பேருந்து பயணிகளுக்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே பேருந்து விவரங்கள், நடத்துநர் விவரங்கள், பேருந்து நிற்கும் நடைமேடை உள்ளிட்ட தகவல்கள் மெசேஜ் மூலம் அனுப்பப்படும். ஆனால், 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய பேருந்துக்கு அத்தகைய மெசேஜ் எதுவும் வரவே இல்லை. இதனால் பேருந்து எப்போது வரும், எங்கு நிற்கும் என்பது தெரியாமல் பயணிகள் குழப்பமடைந்ததாக கூறப்படுகிறது. சிலர் நாம் தான் பேருந்தை மிஸ் செய்து விட்டோமா.. இல்லை தேதி மாற்றி புக் செய்துவிட்டோமா என குழப்பத்திலும் இருந்தனர். பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் இருந்த உதவி மையத்தில் விசாரித்தபோது, நடைமேடை தொடர்பான தகவல் மட்டுமே தெரிவிக்கிறார்கள். அதாவது சேலம் பஸ் என்றால் நடைமேடை 6.. அதில் எந்த பஸ் எப்போது வரும் உள்ளிட்ட தகவல்கள் அவர்களுக்கு தெரிவதில்லை. நாம் கேட்டாலும் உள்ளே சென்று விசாரிக்குமாறு கூறிவிடுகிறார்கள். சரி உள்ளே போய் விசாரிக்கலாம் என சென்றால்.. யாரிடம் கேட்டாலும் தெரியாது என்றே பதிலே வருகிறது. பேருந்து எப்போது வரும் என்பது குறித்து யாராலும் தெளிவான தகவலை வழங்க முடியவில்லை. அங்குள்ள நடத்துநர்களிடம் கேட்டால் நாங்கள் TNSTC பேருந்து ஊழியர்கள் என்றும், SETC நடத்துநர்கள் தனி அவர்களிடம் கேளுங்கள் என்கிறார்கள். பிற SETC பேருந்து நடத்துநர்களை கேட்டால் அவர்களுக்கு தெரியவில்லை என்பதே பதிலாக இருக்கிறது. நடைமேடையில் இருக்கும் உதவி மையத்திலாவது கேட்கலாம் என பார்த்தால் அங்கே யாருமே இல்லை. ஊழியர்களின் உடைமைகள் உள்ளதே தவிர ஊழியர்கள் யாரும் இல்லை. இந்நிலையில், 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் விவரங்களுடன் கூடிய குறுஞ்செய்தி சுமார் 10.50 மணிக்குத்தான் வந்தது.. அப்போது நடத்துநரின் நம்பரை எண்ணை தொடர்பு கொண்டபோது பிஸி..! நீண்ட முயற்சிக்கு பிறகு தொடர்பு கொண்டபோது, வண்டலூரை தாண்டிட்டோம் வந்துட்டே இருக்கோம் என்பதே பதிலாக இருந்தது. சுமார் 11 மணியளவில் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் வந்தது. 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய பேருந்து பஸ் ஸ்டாண்டில் நுழையும்போதே மணி 11. இந்த பேருந்து உள்ளே நுழைந்த போது கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்டோர் பேருந்தை சூழ்ந்து கொண்டனர். அவர்களில் பலரும் இது 11 மணி பேருந்து என்று நினைத்திருந்தனர். நடத்துநர் ஒரு வழியாக விளக்கி அவர்களை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, 10.30 பேருந்து பயணிகளை மட்டும் ஏற்றினார். ஏன் இவ்வளவு லேட், காலையில் எப்போது சேலம் போகும் என அங்குள்ள ஓட்டுநர்களிடம் கேட்டால்.. "பஸ் வந்தா ஏறி உட்கார்ந்து போகணும்.. சும்மா இப்படி எல்லாம் கேட்க கூடாது" என்கிறார். அவர் கோபமாக பேசவில்லை.. மாறாக அவரே வெறுப்பில் தான் புலம்பிக் கொண்டு இருந்தார். பிறகு ஒரு மணி நேரம் தாமதமாக 11.30க்கு தான் பேருந்து கிளம்பியது. பேருந்து தாமதமாவது தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் என்றாலும், குறைந்தபட்சம் பேருந்து எண், ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பேருந்து இருக்கும் இடம் குறித்த தகவல்களை பயணிகளுக்கு சரியான நேரத்தில் வழங்க வேண்டும். இது உரிய நேரத்தில் வழங்கப்படாததே மிக பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. பேருந்து வந்துவிட்டதா, தங்களை விட்டுவிட்டு சென்றுவிட்டதா, பேருந்தை தவறவிட்டுவிட்டோமா என்ற பதற்றத்துடனேயே பயணிகள் காத்திருந்தனர். மேலும், பயணிகள் யாரை தொடர்பு கொண்டால் தகவல் கிடைக்கும் என்பதிலும் தெளிவு இல்லாமல் இருந்தது. அங்கு கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளின் நிலைமை இதுதான். பேருந்து தகவல்கள் வருவதில்லை, பயங்கர லேட், பயணிகள் குழப்பம் என்பதே நிலைமையாக இருந்தது. கிளாம்பாக்கத்தில் பாதி நடைமேடைகளில் அரசு பேருந்துகளும் மீத நடைமேடைகளில் தனியார் பேருந்துகளும் இயங்குகிறது. தனியார் பேருந்துகள் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் சரியான நேரத்தில் இயக்கப்படும் நிலையில், அரசு பேருந்துகளில் மட்டும் ஏன் இவ்வளவு குழப்பம் என்பதே மக்களிடையே கேள்வியாக உள்ளது. நேற்றைய தினம் லாங் வீக் எண்ட் தொடங்க கூட இல்லை. ஆனால், அதற்கு முன்பே இப்படி குழப்பம். இன்று லாங் வீக் எண்ட் ஆரம்பிக்கும் நிலையில், என்னவெல்லாம் நடக்குமோ என்பதே மக்கள் அச்சமாக இருக்கிறது.கிளம்பாக்கம் பேருந்து நிலையம்
குழப்பம்
தகவல் சொல்ல ஆள் இல்லை
பயங்கர லேட்
பதறிய பயணிகள்
அரசு vs தனியார் பேருந்துகள்