கோயம்பேட்டில் ரூ.50-க்கு போன வெங்காய விலை.. நாசிக் டூ சென்னை வரும் கண்டா எக்ஸ்பிரஸ்.. என்ன காரணம்?

  • சென்னை: ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றான சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது, பொதுமக்களின் மிகப்பெரிய கவலையில் ஆழ்த்தி வருகிறது.. டெல்லி, சென்னை, கேரளா, அசாம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் வெங்காயத்தின் விலை குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.. இந்த வெங்காய விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த மத்திய அரசும் அதிரடியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

    Advertisement

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மக்களின் காய்கறி தேவையைத் பூர்த்தி செய்யும் இந்த முக்கிய சந்தைக்கு, உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    Advertisement

    சென்னை கோயம்பேடு மார்க்கெடு

    பருவமழை தாமதம் மற்றும் சில பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், மராட்டிய மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ள காரணத்தால், வட மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் வெங்காயத்தின் வரத்து கடுமையாகச் சரிந்துள்ளது.

    வழக்கமாக தினசரி 70 முதல் 80 லாரிகளில் வந்து கொண்டிருந்த வெங்காயத்தின் வரத்து, தற்போது வெறும் 50 லாரிகளாகக் குறைந்துள்ளதே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    ரூ.50க்கு கிடுகிடு உயர்வு

    வரத்துக் குறைவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள கோயம்பேடு சந்தையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம், தற்போது கிடுகிடுவென உயர்ந்து ரூ.50 வரை விற்கப்படுகிறது. வெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளது.

    Advertisement

    எனவேதான், சந்தையில் நிலவும் இந்தத் தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் உடனடியாகச் சமாளிக்க, மத்திய அரசு தனது வசம் உள்ள கையிருப்பு வெங்காயத்தை நேரடியாகச் சில்லறை விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதற்காக கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் முக்கிய நுகர்வோர் அமைப்புகள் களமிறக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்த விற்பனை நேரடியாகச் செயல்படுத்தப்படவுள்ளது.

    கண்டா எக்ஸ்பிரஸ்

    முக்கியமாக மகாராஷ்டிராவின் நாசிக்கிலிருந்து டெல்லி, சென்னை, கொச்சி, கவுஹாத்தி போன்ற நகரங்களுக்கு வெங்காயத்தை சீக்கிரமாகவும், தடையில்லாமலும் கொண்டு செல்வதற்காக, மத்திய அரசு இன்று முதல் "கண்டா எக்ஸ்பிரஸ்" எனப்படும் ஸ்பெஷல் ரயில்களை இயக்க தொடங்கியுள்ளது.

    Advertisement

    இப்படித்தான் கடந்த 2024 அக்டோபரிலும் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, நாசிக்கிலிருந்து டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்குக் கண்டா எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கியிருந்தது நினைவிருக்கலாம்.

    மத்திய அரசு அதிரடி

    டெல்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை கடந்த வருடம் ரூ.35 ஆக இருந்த நிலையில், இப்போது ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று, கடந்த ஆண்டு ரூ.33-க்கு விற்கப்பட்ட வெங்காயம், சென்னையில் இப்போது ரூ.58 வரை விற்கப்படுகிறது. கேரளா மற்றும் அசாம் மாநிலங்களின் சில பகுதிகளிலும் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

    இந்த விலை உயர்வுக்கு நாட்டின் மிகப்பெரிய வெங்காய உற்பத்தியாளர் மாநிலமான மகாராஷ்டிராவில் காரிப் பருவ வெங்காய உற்பத்தியில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது...

    Advertisement

    இந்த நெருக்கடியை எதிர்கொள்ள, விவசாயிகள் கூட்டுறவுச் சங்கமும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பும் இணைந்து நடப்பு நிதியாண்டிற்காக 1.2 லட்சம் டன் வெங்காயத்தைக் கையிருப்புக்காகக் கொள்முதல் செய்துள்ளன. மத்திய அரசின் இந்தச் சிறப்பு ரயில்களும் நேரடி விற்பனைத் திட்டங்களும் பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Koyambedu Onion Price Hits Rs 50.. Kanda Express From Nashik to Chennai.. What Is the Reason?