லீமாரோஸ் மார்ட்டின் சொத்து இத்தனை கோடியா? நம்பர் 1 தொழிலதிபர் எம்எல்ஏ இவர்தான்.. டாப் 10 லிஸ்ட் இதோ
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ-க்களின் பின்னணி குறித்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) அறிக்கை தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. 234 தொகுதிகளில் ஆய்வு செய்யப்பட்ட 233 வெற்றியாளர்களின் விவரங்கள், பணபலம் மற்றும் குற்றப்பின்னணி அரசியலில் இன்னும் முக்கியப் பங்கு வகிப்பதையே காட்டுகின்றன.
நடந்து முடிந்த தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், எண்ணிக்கையைத் தாண்டி வெற்றியாளர்களின் பின்னணிதான் இப்போது முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

கிரிமினல் கேஸ்
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.. இதில் ஆய்வு செய்யப்பட்டவர்களில் 126 பேர் (54%) தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 56 பேர் (24%) கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற கடுமையான வழக்குகளைச் சந்திப்பவர்கள்.
2021ல் 60 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது 54 சதவீதமாக சற்று குறைந்திருந்தாலும், சட்டமன்றத்திற்குள் பாதிக்கும் மேற்பட்டோர் வழக்குகளுடன் நுழைவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாமக, விசிக, சிபிஐ(எம்) ஆகிய கட்சிகளின் வெற்றியாளர்கள் 100% கிரிமினல் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். தவெக-வில் வெற்றி பெற்றவர்களில் 41 பேர் மீது வழக்குகள் உள்ளன.
விஸ்வரூபம் எடுத்த பணபலம்
தமிழக அரசியலின் பொருளாதார மாற்றம் இந்த அறிக்கையில் தெளிவாக வெளிப்படுகிறது. 2021-இல் ஒரு எம்.எல்.ஏ-வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.12.27 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது 4 மடங்கு உயர்ந்து ரூ.48.35 கோடியாக மாறியுள்ளது.
வெற்றி பெற்றவர்களில் 193 பேர் (83%) கோடீஸ்வரர்கள்! கட்சி வாரியாக அதிமுக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.152 கோடியைத் தாண்டியுள்ளது. தவெக வேட்பாளர்களின் சராசரி ரூ.27 கோடியாகவும், திமுக-வினரின் சராசரி ரூ.14 கோடியாகவும் உள்ளது.
யார் அந்த நம்பர் 1 கோடீஸ்வரர்?
தமிழகத்திலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளராக லால்குடி தொகுதியில் வென்ற அதிமுக வேட்பாளர் லீமாரோஸ் மார்ட்டின் ரூ.5,863 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, தவெக-வின் ஆதவ் அர்ஜுனா ரூ.534 கோடி சொத்துகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
நடிகர் விஜய் (சி. ஜோசப் விஜய்) பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளார். அவர் ரூ.648 கோடி சொத்துகளுடன் இருப்பதோடு, கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.184 கோடி வருமானம் ஈட்டி, அதிக வருமானம் அறிவித்த வேட்பாளர்களில் முன்னணியிலும் உள்ளார்.
இளைஞர்கள் + பெண்கள்
புதிய சட்டமன்றத்தில் தலைமுறை மாற்றம் தெரிகிறது. 25 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 21 சதவீதம் பேர் உள்ளனர். 79 வயதான பாஜக வேட்பாளர் போஜராஜன் முதல் 28 வயதே ஆன இளம் வேட்பாளர்கள் வரை பல்வேறு வயதினரும் இணைந்து சட்டமன்றத்திற்கு செல்கிறார்கள்..
அதிலும் பெண் பிரதிநிதித்துவம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்ந்திருப்பது, தமிழக அரசியலில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்திருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் பார்க்கும்போது இந்த 2026 தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் புதிய கட்சிகள் மற்றும் முகங்களை அறிமுகப்படுத்தினாலும், பணபலமும் குற்றப்பின்னணியும் இன்னும் தேர்தல் அரசியலின் மையமாக இருப்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது...!!












Click it and Unblock the Notifications