“போலீஸ் விசாரணையில் நம்பகத்தன்மை இல்லை” - வரதட்சணை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது ஐகோர்ட்!

  • சென்னை: கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாக மனைவி தொடர்ந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    ஈரோட்டை சேர்ந்த பி. யுதே என்பவர் தான் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக அளித்த புகாரை காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    Advertisement

    இந்த வழக்கு நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தனது திருமணத்தின் போது 200 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், வெள்ளிப் பொருள்கள், விலையுயர்ந்த சொகுசு கார் உள்ளிட்டவை கணவருக்கு வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னரும் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் கணவர் குடும்பத்தினர் நடத்தி வந்த நிறுவனத்தில், இயக்குநராக இருந்த தனது பதவியை நீக்குவதற்காக தனது கையெழுத்துடன் போலி ராஜினாமா கடிதம் தயாரிக்கப்பட்டதாகவும், தனக்குச் சொந்தமான 4,500 பங்குகள் வேறு நபருக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், ராஜினாமா கடிதத்தின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்கவில்லை. பங்குகள் மாற்றப்பட்டது தொடர்பான நிறுவன ஆவணங்கள், இயக்குநர்கள் குழுக் கூட்டக் குறிப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் முறையாக சேகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    அதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.இந்திரா, காவல்துறை விசாரணை முடிக்கப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற முடியாது என வாதிட்டனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, ராஜினாமா கடிதத்தின் உண்மைத் தன்மை, பங்குகள் மாற்றப்பட்ட நடைமுறை மற்றும் தொடர்புடைய நிறுவன ஆவணங்கள் குறித்து முறையாக காவல்துறை விசாரணை நடத்தப்படவில்லை. முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்படாததும், விசாரணையில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இருப்பதும், அதன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதனால், காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

    Advertisement

    மேலும், இந்த வழக்கை ஈரோடு சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளருக்கு மாற்றிய நீதிபதி, எந்தவித அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்த வேண்டும். காவல்துறையிடம் உள்ள அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடியிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். ஆவணங்களை பெற்று 5 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விரிவான இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    English Summary

    Madras High Court has issued a decisive order transferring a case—filed by a wife alleging harassment by her husband and his family over dowry demands—to the CBCID for investigation.