சரிந்த ஓட்டுப்பதிவு.. இறுதியாக மதுராந்தகத்தில் 85.90% – தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவு

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் இறுதியாக மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் இறுதியாக 85.90 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. தாராபுரம் சட்டசபை தொகுதியில் இறுதியாக 80.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இது கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை ஒப்பிடும்போது குறைவாகும்.

    Advertisement

    மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் உள்ளனர். 167 மையங்களில், 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாராபுரத்தில் மொத்தம் 2,22,406 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு மொத்தம் 186 மையங்களில் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Advertisement

    விறுவிறு வாக்குப்பதிவு

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து முடிவடைந்துள்ளது. காலை 6 மணிக்கே வாக்குச்சாவடி மையங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. வாக்காளர்களும் காலை 6.30 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வருகை தந்தனர்.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து விட்டு சென்றனர். வேலைக்கு போக வேண்டும் என்பதற்காக விவசாயிகள் பலரும் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

    9 மணி நிலவரம்

    இரு தொகுதிகளிலும் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 15.99 சதவீத வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 17.55 சதவீத வாக்குகளும் பதிவானது.

    Advertisement

    2026 பொதுத்தேர்தலில் இதே மதுராந்தகம் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 16.55 சதவீத வாக்குகளும், தாராபுரத்தில் 18.88 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது.

    11 மணி நிலவரம்

    மதுராந்தகம் தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 35.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 74,826 பேர் வாக்களித்துள்ளனர். கடந்த 2026 சட்டசபை தேர்தைல் இதே நேர நிலவரப்படி 37.17 சதவீத வாக்குகள் பதிவானது.

    தாராபுரம் தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 37.28 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த 2026 சட்டசபை தேர்தலில் இதே நேர நிலவரப்படி தாராபுரத்தில் 42.45 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதனால் கடந்த தேர்தலை விட தற்போது வாக்காளர்கள் மத்தியில் போதிய ஆர்வம் இல்லை என வாக்குப்பதிவு நிலவரம் காட்டுகிறது.

    Advertisement

    மதியம் 1 மணி நேர நிலவரம்

    மதுராந்தகம் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 55.18 சதவீத வாக்குகள் பதிவானது. இதுவரை 1,17,968 பேர் வாக்களித்துள்ளனர். இன்னும் 95,820 பேர் வாக்களிக்க இருக்கின்றனர். கடந்த 2026 சட்டசபை தேர்தலில் இதே நேர நிலவரப்படி மதுராந்தகத்தில் 57.22 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    தாராபுரம் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 56.09 சதவீத வாக்குகள் பதிவானது. 1,25,292 பேர் வாக்களித்துள்ளனர். கடந்த 2026 சட்டசபை தேர்தலில் இதே நேர நிலவரப்படி தாராபுரத்தில் 55.42 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இதனால் தாராபுரத்தில் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடந்து வந்தது.

    Advertisement

    பிற்பகல் 3 மணி நிலவரம்

    மதுராந்தகம் தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70.31 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த 2026 சட்டசபை தேர்தலில் இதே நேர நிலவரப்படி மதுராந்தகத்தில் 72.41 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால் தற்போது வாக்குப்பதிவு சற்று மந்தமாகவே நடைபெற்றது.

    தாராபுரம் தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 68.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2026 சட்டசபை தேர்தலில் இதே நேர நிலவரப்படி தாராபுரத்தில் 71.15 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இரு தொகுதிகளிலும் பொது தேர்தலை விட சற்று குறைவாகவே வாக்குகள் பதிவானது.

    Advertisement

    தேர்தல் முடிந்தது - மாலை 5 மணி நிலவரம்

    மாலை 6 மணிக்கு இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நிறைவு பெற்றது. வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் முறையில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் முடிவடைந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி மதுராந்தம் சட்டசபை தொகதியில் 83.86 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இது கடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிடும்பாது குறைவாகும். 3.98 சதவீத வாக்குப்பதிவு சரிந்துள்ளது. ஏனென்றால் அந்த தேர்தலி்ல மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 87.84 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    அதேபோல் தாராபுரம் இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 78.53 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இது கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது 8.21 சதவீதம் குறைவாகும். ஏனென்றால் அந்த தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 86.74 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    இறுதி நிலவரம்

    இறுதி நிலவரப்படி மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் 85.90 சதவீத வாக்குகளும் (ஏப்ரல் 23 சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் 92.28 சதவீதம்), தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் 80.31 சதவீத வாக்குகளும் (ஏப்ரல் 23 சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் 88.53 சதவீதம்) பதிவாகி உள்ளது. 2 தொகுதிகளிலும் கடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது வாக்குப்பதிவு குறைவாகும்.இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    மதுராந்தகம் இடைத்தேர்தல்

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியம் ஆனார். இதையடுத்து காலியாக இருந்த அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தவெக சார்பில், பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்ற மரகதம் குமரவேலுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

    திமுக சார்பில் பரந்தாமனும், அதிமுக சார்பில் கணிதா சம்பத்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமனும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி என்பவரும் வேட்பளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் மதுராந்தகத்தில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    தாராபுரம் இடைத்தேர்தல்

    தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதையடுத்து காலியாக இருந்த தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த மாதம் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியானது. இதன்படி, தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரு சில தொகுதிகளில் காலை 6.30 மணிக்கே வருகை தந்த வாக்காளர்கள், 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் ஆளாக வாக்களித்துவிட்டு சென்றனர்.தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பாக சத்யபாமா, திமுக சார்பாக சுகன்யா, அதிமுக சார்பாக பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பாக கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக லட்சுமனண் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    தாராபுரத்தில் மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 406 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 875 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். 1 லட்சத்து 15 ஆயிரத்து 523 பேர் பெண் வாக்காளர்கள் ஆவர். 8 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

    தாராபுரம் தொகுதியில் மொத்தம் 186 மையங்களில் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அதில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. களத்தில் 5 முனை போட்டி என்றாலும், ஆளும் தவெக, திமுக, அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு சென்ற எம்.எல்.ஏக்கள் என்பதால் இந்த தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று தவெகவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

    English Summary

    Madurantakam, Dharapuram By Election 2026 (மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்): Polling for the Maduranthakam and Dharapuram Assembly by-elections is taking place today. While actual voting is scheduled to begin at 7:00 AM, a mock poll is currently underway; the Election Commission has made the necessary arrangements for this.