ராஜினாமா செய்ய மாட்டேன்.. கடையநல்லூர் எம்எல்ஏவும் அறிவிப்பு.. வைகோவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி

  • சென்னை: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏக்கள் இருவரும் ராஜினமா செய்ய இருப்பதாக பேச்சு எழுந்த நிலையில், சீர்காழி எம்.எல்.ஏ நேற்று மதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக கூறினார். இன்று மற்றொரு மதிமுக எம்.எல்.ஏவும், தனது பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று கூறி வைகோவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டனியில் வைகோவின் மதிமுக போட்டியிட்டது. உதயசூரியன் சின்னத்தில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, கடையநல்லூர் மற்றும் சீர்காழி தொகுதிகளில் வென்றது. தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ள சூழலில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுகவும் விலகியுள்ளது.

    Advertisement

    ராஜினாமா செய்ய மாட்டேன்

    திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக அறிவித்த சூழலில், அக்கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், சீர்காழி எம்.எல்.ஏ இதனை திட்டவட்டமாக மறுத்தார். மதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக செந்தில் செல்வன் கூறி, வைகோவுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏவான ராஜேந்திரனும் பதவியை ராஜினாமா செய்யப்போவது இல்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ராஜேந்திரன் கூறியிருப்பதாவது:-

    "கட்சி, சாதி, மதம் கடந்து நம்மை வெற்றிபெறச் செய்த கடையநல்லூர் தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வருகின்ற உணர்வினை மதித்தும், தலைவர் வைகோ அவர்கள் மீதோ, சட்டமன்ற உறுப்பினரான என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை மேற்கொள்ள வேண்டாம். தங்கள் அறிவுரைப்படி சட்டமன்றத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. கட்சி உணர்வோடு நான் இயங்கி வருவதையும், பேசியதையும் பாராட்டிச் சொன்னீர்கள்.

    Advertisement

    இப்போது அவசரம் வேண்டாம்

    எனது சட்டமன்றச் செயல்பாடுகள் தகுதி நீக்கத்திற்கு வழிவகுத்தால் மகிழ்ச்சியுடன் பதவியைத் துறந்து மக்களிடம் முறையிடுவோம். இப்போது அவசரம் வேண்டாம். குறைந்தபட்சம் ஆறு மாதம் பொறுத்து இருப்போம். தவிர,
    கூட்டணி குறித்து தாங்களும், கட்சியும் எடுக்கும் முடிவை மதிக்கிறேன். மேற்கண்ட தகவல்களையும், இன்னும் சில பல செய்திகளையும் நேற்று (26.06.2026) பிற்பகல் 2 மணிக்கு தாயகத்தில் தலைவர் வைகோ அவர்களிடம் கண்ணீருடன் முறையிட்டேன்.

    அதன் பின்னர் இரவு தலைவர் வைகோ அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை, பொதுக்குழுவில் என்னால் செயல்படுத்த இயலாது என்பதால் பொதுக்குழுவில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதை கழகப் பொருளாளர் மூலம் தலைவர் கவனத்திற்கு சொல்லி உள்ளேன். 42 ஆண்டுகளாக தலைவர் வைகோ அவர்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பும், விசுவாசமும் உண்மையானது.

    Advertisement

    உங்கள் நலனையும் உள்ளடக்கியது

    அதேபோல் "வாக்களித்த மக்கள் பெருமைப்படுகின்ற வகையிலும், வாக்களிக்காத மக்கள் இவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கின்ற வகையிலும் எனது செயல்பாடுகள் இருக்கும் என்று தொகுதி மக்களிடம் நானும், தலைவர் வைகோ அவர்களும் பேசி ஏற்படுத்தி வைத்திருக்கும் நம்பிக்கையும் உண்மையானது. எஞ்சியுள்ள நம் வாழ்வில் எவ்வித களங்கமும் சுமக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. தலைவர் அவர்களே! எனது மேற்கண்ட கருத்துகள் உங்கள் நலனையும் உள்ளடக்கியது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    MDMK MLA: Amid MDMK's exit from the DMK alliance, Kadayanallur MLA has ruled out resigning from his Assembly seat. The announcement comes after another MDMK MLA distanced himself from the party, creating fresh political challenges for party chief Vaiko.