சென்னை: சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் உடனடியாக அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டி பல்வேறு நிபுணர்களும் தொழில்துறையினரும் காணொளிகளை வெளியிட்டு வருகிறார்கள். அப்படி ஒருவர் வெளியிட்ட காணொளி சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. " 20 வருடங்களுக்கு புதிய ஏர்போர்ட் சென்னைக்கு கிடையாது. பரந்தூரை விட்டால் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைவது கடினம் என்று கூறும் இணையவாசிகள், அவர் புள்ளிவிவரங்களுடன் பேசிய காணொளியைப் பகிர்ந்து வருகின்றனர். அந்தக் காணொளியில் உள்ள தகவல்களைப் பார்ப்போம்:
"தற்போது இருக்கக்கூடிய மீனம்பாக்கம் விமான நிலையம் 1,300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த விமான நிலையம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை மட்டுமே கையாள முடியும். இங்குப் போதுமான டாக்ஸி வே (Taxiways) மற்றும் ஏரோ பிரிட்ஜ்கள் (Aero-bridges) கிடையாது.
தற்போதைய சர்வதேச விமானங்களைப் பார்த்தால் ஏர்பஸ் (Airbus) வகை பெரிய விமானங்களே அதிகம் வருகின்றன. ஆனால், அத்தகைய பெரிய விமானங்கள் தரையிறங்குவதற்கான வசதிகள் சென்னையில் முழுமையாகக் கிடையாது. அப்படி இறங்க முடியாத விமானங்கள் ஒன்று பெங்களூரு அல்லது ஐதராபாத் நகரங்களுக்குச் சென்று இறங்கும் சூழல் உள்ளது. இதில் பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. இது கிட்டத்தட்ட 5 கோடி பயணிகளைக் கையாளுவதுடன், ஏர்பஸ் உட்பட்ட அனைத்து வகையான விமானங்களும் வந்து செல்லக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது. ஐதராபாத் விமான நிலையம் 5,500 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டு, ஆண்டிற்குச் சுமார் 3 கோடி பயணிகளைக் கையாளுவதுடன், எதிர்காலத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் விரிவாக்கம் செய்யக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தைப் பொறுத்தவரை 5,100 ஏக்கர் நிலப்பரப்பில் ஆண்டுக்கு 8 கோடி பயணிகளைக் கையாள்கிறது. நவி மும்பை விமான நிலையம் 2,366 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது; இது எதிர்காலத்தில் 9 கோடி பயணிகளைக் கையாள முடியும் என்பதோடு, இந்தியாவிலேயே மிகவும் பிஸியான விமான நிலையமாக மாறக்கூடிய திறன் கொண்டது. விசாகப்பட்டினத்தில் 2,203 ஏக்கரில் கட்டப்பட்ட புதிய விமான நிலையம், தற்போது 60 லட்சம் பயணிகளைக் கையாள்வதோடு, 2 கோடி பயணிகள் வரை கையாளக்கூடிய திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தில் சென்னை விமான நிலையம் 5-வது இடத்தில் உள்ளது (டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக). ஆனால், இந்தியாவின் தொழில்துறை ஏற்றுமதியில் (Top Industry Exports) சென்னைதான் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருள் (Software) துறைகளில் சென்னை முன்னணி வகிக்கிறது. எனவே, சென்னைக்கு வந்து செல்லும் தொழிலதிபர்களும் பயணிகளும் இந்த விமான நிலையத்தையே பயன்படுத்த வேண்டும். இப்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய முடியாது. ஒருபுறம் பரங்கிமலை, மறுபுறம் பல்லாவரம், பின்பகுதியில் குடியிருப்புப் பகுதிகள் முழுமையாக நிறைந்துள்ளன. அவற்றை இடித்துவிட்டு நிலத்தைக் கையகப்படுத்துவது சாத்தியமே இல்லை. எனவே, பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் புதிய பன்னாட்டு விமான நிலையங்கள் அமைக்கப்பட்டதைப் போல, சென்னையிலும் புதிய விமான நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதற்காகப் பரந்தூரில் நிலத்தைக் கையகப்படுத்த மாநில அரசு முடிவு செய்தது. இத்திட்டத்தை வடிவமைப்பது மத்திய அரசு; நிலத்தை அடையாளம் காண்பது மாநில அரசு. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) ஒப்புதல் கிடைத்த இடம் பரந்தூர். ஏனெனில், இங்கு ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வசிக்கிறார்கள்; கையகப்படுத்தும் நிலத்தின் மதிப்பும் குறைவு. அதிக மக்கள் வாழும் பகுதியாக இருந்தால் அனுமதி கிடைப்பது கடினம் என்பதோடு, செலவும் அதிகமாகும். ஆனால், பரந்தூரில் நீர்நிலைகளும் விவசாய நிலங்களும் அதிகம் உள்ளன. பெங்களூரு, ஐதராபாத் மற்றும் ஒரு காலத்தில் டெல்லி விமான நிலையங்கள் அமைக்கப்பட்ட இடங்களும் கூட விளைநிலங்களாக இருந்தவைதான். இதற்கு விசாகப்பட்டினம் விமான நிலையமும் சிறந்த எடுத்துக்காட்டு. அது 2015-இல் முதன்முறையாக முன்மொழியப்பட்டு, 2019-இல் அடிக்கல் நாட்டப்பட்டு, 2026 ஜூலை 7-இல் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது (11 ஆண்டுகளில் தயாராகிவிட்டது). நமது பரந்தூர் விமான நிலையத்திற்கு 2018-இல் திட்டமிடப்பட்டு, 2026-இல் ரத்தாகிவிட்டது. இனிமேல் சென்னைக்கு வெளியே சென்று நிலத்தைத் தேடி, நில அளவை (Survey) முடித்து, முன்மொழிவுகளைத் தயாரித்து, நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். சென்னையின் புறநகர்ப் பகுதிகள் அனைத்துமே விவசாய நிலங்கள்தான்; செங்கல்பட்டு பகுதியில் விவசாய நிலங்கள் இல்லாமல் நிலத்தைக் கையகப்படுத்தவே முடியாது. பெங்களூரு பாதையில் வேலூர் வரை தொழிற்பேட்டைகள் உருவெடுத்துவிட்டன. எனவே, அங்கேயும் நிலம் கையகப்படுத்துவது கடினம். ஒருபுறம் கடல் இருப்பதால் அங்கும் விமான நிலையம் அமைக்க முடியாது. இனிமேல் புதிய நிலத்தைக் கையகப்படுத்தவே 10 ஆண்டுகள் ஆகும். அதற்குப் பின் விமான நிலையம் கட்டி முடிக்க ஒட்டுமொத்தமாக 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். இப்போது சென்னையின் வளர்ச்சி வேகமாகக் இருக்கும் சூழலில், இன்னும் 20 ஆண்டுகள் கழித்து விமான நிலையம் கட்டினால் என்ன பயன்?" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.