“முதல்வருக்கு 5 நாள் அவகாசம் தரோம்.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்”.. பட்டினப்பாக்கம் மீனவர்கள் எச்சரிக்கை

  • சென்னை: "முதலமைச்சருக்கு 5 நாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்யணும். இல்லனா தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்.. மீண்டும் 1985 வரலாற நடக்க வச்சிடாதீங்க.." என பட்டினப்பாக்கம் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் அதிகளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடியில் புதிய வளாகத்தை அமைப்பதற்கு அரசு முதற்கட்ட அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.

    இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் தங்களது பாரம்பரிய குடியிருப்புப் பகுதி மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் குற்றம்சாட்டி எதித்து வருகின்றனர்.

    Advertisement

    புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி செப்டம்பர் 29 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

    தங்களது கோரிக்கைக்கு அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளதாக மீனவ அமைப்புகள் தெரிவித்திருந்தன. அதன்படி, இன்று பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

    இந்தப் போராட்டத்தைத் தடுக்கும் விதமாகவும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளிக்கவும் பட்டினப்பாக்கத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில், மீனவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. தவெக அரசுக்கு எதிராக மீனவர்கள் முழக்கம் எழுப்பினர்.

    Advertisement

    போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் பேசுகையில், "முதலமைச்சருக்கு 5 நாள் அவகாசம் தரோம். அதுக்குள்ள பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணையை முதல்வர் ரத்து செய்யணும். இல்லாவிட்டால் அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்.

    மீண்டும் 1985 வரலாற நடக்க வச்சிடாதீங்க.. இது மீனவர்களின் வாழ்வாதாரம். இங்கு புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் 11 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரமே அழிந்துவிடும். மக்களின் கடும் கோபத்துக்கு முதல்வர் ஆளாக நேரிடும்." என எச்சரித்துள்ளார்.

    English Summary

    “We are giving the Chief Minister five days. Within that time, the Government Order to establish the new Secretariat at Pattinapakkam must be revoked. Otherwise, Tamil Nadu will come to a standstill... Do not let the history of 1985 repeat itself,” warned the fishermen of Pattinapakkam.