மீண்டும் ஒரு லாக்கப் மரணம்? புழல் சிறையில் இருந்த விசாரணை கைதி மரணம்.. உறவினர்கள் முற்றுகை போராட்டம்

  • சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி பாலாஜி, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சிறைக் காவலர்கள் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி பாலாஜியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Advertisement

    சென்னையை அடுத்த சேலையூர் ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், பாலாஜி தனது கடையில், தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சேலையூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    இந்த தகவலின் பேரில் சேலையூர் போலீசார் ஜூலை 12ஆம் தேதி, பாலாஜியின் கடைக்குச் சென்று சோதனை நடத்தி, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. பின்னர், போலீசார் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.

    புழல் சிறையில், விசாரணை கைதிகள் அறையில் அடைக்கப்பட்டிருந்த பாலாஜிக்கு நேற்று காலை 7.45 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அவரை சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    அங்கு பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து சிறை வார்டன் அளித்த புகாரின் பேரில், புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    பாலாஜி உயிரிழந்த செய்தியை கேட்டு அவருடைய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறைக் காவலர்கள் தாக்கியதால்தான் பாலாஜி உயிரிழந்ததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், அவர்களின் குற்றச்சாட்டுக்கு காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், புழல் சிறைக் கைதி பாலாஜி உயிரிழந்த விவகாரத்தில் சேலையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாலாஜியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் தாக்கியதால் தான் பாலாஜி உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் என்ற விசாரணைக் கைது சிறையில் தாக்கப்பட்டு பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னையில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Police state that Balaji, an undertrial prisoner lodged in Puzhal Prison, died in the hospital due to a heart attack. However, his relatives have staged a protest, alleging that he died as a result of an assault by prison guards.