கொடைக்கானல், குன்னூர், மாஞ்சோலையில் நிலச்சரிவு அபாயம்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

  • சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுவடைந்து, ஆந்திரா-ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரும் என்கிற போதிலும், தற்போதைய சூழலில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்த சூழலில் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், வரும் செவ்வாய்கிழமை வரை நீலகிரி மலைப்பகுதிகள், குன்னூர், கொடைக்கானல் மற்றும் மாஞ்சோலை உள்ளிட்ட தமிழகத்தின் மலைவாசல் தலங்களில் நிலச்சரிவுக்கு அதிக அபாயம் உள்ளது என்றும், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "தமிழ்நாடு மலைப்பிரதேசங்களில் செவ்வாய்க்கிழமை வரை பலத்த மழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்று எச்சரித்துள்ளார். மேலும் "கேரளாவிற்கு அருகில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்போது, அடுத்த 3 நாட்களுக்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மலைப்பிரதேசங்களில் கூடுதல் கவனம் தேவை " என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், "அதிக அபாயம் உள்ள பகுதிகள் - கிழக்குப் பகுதியில் திறந்திருக்கும் பள்ளத்தாக்குகள்

    1. குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீலகிரி பகுதி
    2. கொடைக்கானல்
    3. மஞ்சோலை மலைப்பகுதிகள்

    சாதகமான வளிமண்டலச் சூழல் நிலவும் பட்சத்தில், இந்த மலைப்பிரதேசங்களில் மிக அதிக மழை பெய்யக்கூடும். இதனால் நிலச்சரிவுகள் மற்றும் சரிவுகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. செவ்வாய்க்கிழமை வரை இந்தப் பகுதிகளுக்குத் தவிர்க்க முடியாத காரணங்கள் இன்றி பயணம் செய்வதைத் தவிர்க்கவும்; குறிப்பாக, பலத்த மழை தொடர்ந்து பெய்தால் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது" இவ்வாறு கூறியுள்ளார்.

    Advertisement

    இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், " குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து காணப்படுகிறது.

    இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று காலை மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியது.

    Advertisement

    இது இன்று (சனிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது.

    அதனையடுத்து நாளை மறுதினம் (திங்கள்கிழமை) மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற இருப்பதாகவும், அதற்குடுத்த 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டிய தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலினால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், மழைக்கான சூழல் உள்ளது.

    Advertisement

    அதன்படி, இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன மழையும், ஏனைய தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    Advertisement

    நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை மறுதினம் நீலகிரி, கோவை, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிருஇடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், காற்றுடன் கனமழையும், ஏனைய தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், சாத்தூர் (விருதுநகர்) 16 செ.மீ., சின்னகாமன்பட்டி (விருதுநகர்) 14 செ.மீ., சமுத்திராப்பட்டி (திண்டுக்கல்) 13 செ.மீ., குப்பநத்தம் (கடலூர்), விருதாச்சலம் (கடலூர்), கல்லிக்குடி (மதுரை), கொடவாசல் (திருவாரூர்) தலா 11 செ.மீ. உட்பட பல இடங்களில் மழை பெய்திருக்கிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    TAMIL NADU HILL STATIONS — HEAVY RAIN & POSSILE LANDSLIDE ALERT TILL TUESDAY: When a low-pressure system develops over the Arabian Sea close to Kerala, watch out for the following hill stations over the next 3 days. HIGH-RISK AREAS TO WATCH - VALLEYS that open from EAST 1. Coonoor belt and surrounding Nilgiris 2. Kodaikanal 3. Manjolai Hills