விஜய் விட்டு சென்ற திருச்சி கிழக்கு.. ஜான் ஆரோக்கியசாமிக்கு சான்ஸ் ஏன்? தவெகவுக்கு உள்ள 3 சாய்ஸ்
சென்னை: திருச்சி கிழக்கு தொகுதியில் அடுத்ததாக யார் எம்எல்ஏவாக போகிறார்கள் என்ற கேள்வி சற்று அதிகமாகவே தவெகவில் எழுந்துள்ளது.. இதனால் தவெக வேட்பாளர் தேர்வு அரசியல் கவனம் பெற்றுள்ளது. விஜய் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், இங்கு நிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்பது சாதாரணமான முடிவாக இருக்காது.. ஏற்கனவே தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, நடிகை திரிஷா என 2 பெயர்கள் பேசப்பட்டு வந்தாலும், விஜய்க்கு வேறொரு சாய்ஸ் இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது..!!
கட்சியின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

திருச்சி கிழக்கு தொகுதி
இதனால் திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், அங்கு மீண்டும் தவெக வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் இருக்கும்.
ஆனால், விஜய்யின் செல்வாக்கில் கிடைத்த வெற்றியை அடுத்த வேட்பாளரும் தக்கவைத்துக் கொள்வாரா என்பது தனியான கேள்வி. இதற்காக வேட்பாளர் தேர்வில் கட்சித் தலைமை பல்வேறு அம்சங்களைக் கவனிக்க வேண்டியிருக்கும்.
ஜான் ஆரோக்கியசாமிக்கு வாய்ப்பு?
இந்த தொகுதியில் ஜான் ஆரோக்கியசாமியின் பெயர் அடிபடுகிறது.. இதற்கு காரணம்,தவெகவின் தேர்தல் வியூக பணிகளில் அவருக்கு இருந்த பங்களிப்புதான். தேர்தல் காலத்தில் கட்சியின் பிரச்சார வியூகங்கள், தேர்தல் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளில் அவர் செயல்பட்டுள்ளார். இதனால் கட்சியின் அரசியல் செயல்பாடுகளை நன்கு அறிந்த ஒருவரை நேரடியாக தேர்தல் களத்திலேயே இறக்கினால் அது மிகுந்த பலனை தரும் என்ற எதிர்பார்ப்பு கட்சி மேலிடத்தில் நிலவுகிறது.
ஆனால், தேர்தல் வியூகங்களை வகுப்பது என்பது வேறு, ஒரு தொகுதி மக்களின் பிரதிநிதியாக செயல்படுவது என்பது வேறு. தொகுதி மக்களுடன் நேரடித் தொடர்பு, உள்ளூர் பிரச்சினைகள் குறித்த புரிதல், மக்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவு ஆகியவையும் இதில் கவனிக்கப்பட வேண்டியவை.
அதனால் ஜான் ஆரோக்கியசாமிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது அவருடைய தேர்தல் அனுபவத்தைத் தாண்டி பல்வேறு அரசியல் கணக்குகளைப் பொறுத்தே அமையும்.
திரிஷா பெயரின் பின்னணி
நடிகை திரிஷாவின் பெயரும் இதில் பேசப்படுகிறது. சினிமாவில் நீண்ட காலமாகப் பிரபலமாக இருக்கும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் உள்ளது.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை சினிமாவுக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அந்தவகையில், திரிஷாவின் பெயர் வேட்பாளர் தேர்வு தொடர்பான பேச்சில் இடம்பெறுவது கவனத்தைப் பெற்றுள்ளது. ஆனால், வெறும் சினிமா புகழ் மட்டுமே தேர்தல் வெற்றியைத் தீர்மானித்துவிடாது. அரசியல் ஈடுபாடு, மக்கள் தொடர்பு, தொகுதியில் மேற்கொள்ளும் பணிகள் எனப் பல அம்சங்கள் முக்கியம்.
3வது சாய்ஸ் யார்?
அப்படியானால் இந்த 2 பெயர்களைத் தாண்டி, திருச்சி கிழக்கு தொகுதியில் ஏற்கனவே அரசியல் அனுபவம் கொண்டவர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
வெளியில் பிரபலமான ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதற்கும், தொகுதியின் அரசியல் சூழலை அறிந்த உள்ளூர் முகத்தைத் தேர்வு செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. உள்ளூர் பிரச்சினைகள், மக்களின் எதிர்பார்ப்புகள், கட்சியின் தொகுதி அளவிலான கட்டமைப்பு ஆகியவற்றை அறிந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்தும் தவெக தலைமை ஆலோசிக்க வேண்டியிருக்கும்.
காரணம், இடைத்தேர்தல் என்பது ஒரு வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கை மட்டும் சோதிக்கும் களம் கிடையாது.. கட்சியின் அமைப்பு பலம், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மீதான மக்களின் பார்வை, எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகம் எனப் பல விஷயங்கள் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
விஜய் எடுக்கும் முடிவு என்ன?
திருச்சி கிழக்கு தொகுதியில் ஜான் ஆரோக்கியசாமி, நடிகை திரிஷா அல்லது உள்ளூர் அரசியல் முகம் என 3 விதமான வாய்ப்புகள் குறித்துப் பேசப்படுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் ஒவ்வொரு பின்னணி இருக்கிறது.
ஜான் ஆரோக்கியசாமி என்றால் தேர்தல் வியூக அனுபவம், திரிஷா என்றால் சினிமா மூலம் கிடைத்த பொதுவெளி அறிமுகம், உள்ளூர் முகம் என்றால் தொகுதி அளவிலான அரசியல் தொடர்பு என வெவ்வேறு அம்சங்கள் முன்னால் நிற்கின்றன.
விஜய் ஆப்ஷன் எது
இவற்றில் எதை முன்னிலைப்படுத்துவது என்பதுதான் விஜய்க்கு இருக்கும் முக்கியமான முடிவு... குறிப்பாக, அவர் விட்டுச் சென்ற தொகுதியில் அடுத்ததாகப் போட்டியிடுபவர் தவெகவின் அரசியல் முகமாகவும் பார்க்கப்படுவார்.
அதனால் திருச்சி கிழக்கில் வேட்பாளர் தேர்வு என்பது ஒரு இடைத்தேர்தலுக்கான முடிவு மட்டுமல்ல. அடுத்தகட்டத்தில் தவெக தனது அரசியல் பிரதிநிதிகளை எப்படித் தேர்வு செய்யப்போகிறது என்பதற்கான முக்கியமான அறிகுறியாகவும் அமையலாம்.
இப்போது பேசப்படும் பெயர்கள் எதுவும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கிடையாது.. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கட்சியின் ஆலோசனைகள் முடிவுக்கு வரும்போதுதான் விஜய்யின் இறுதி முடிவு என்ன என்பது தெரியவரும்... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!




Click it and Unblock the Notifications
