Sengottaiyan: அமைச்சரானார் செங்கோட்டையன்! முதல்முறையாக பொதுப் பணி துறை? பவர்ஃபுல்லாக்கும் விஜய்!
சென்னை: தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்ற நிலையில் அனுபவம் வாய்ந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பொதுப் பணித் துறை (PWD) ஒதுக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த துறையை இவர் முதல் முறையாக பார்க்கிறார்.
சுமார் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட இவர், அதிமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக இருந்து, தற்போது தவெகவின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.

கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சரவைகளில் பொதுப் பணித் துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் மற்றும் செங்கோட்டையனின் துறை சார்ந்த அனுபவங்கள் குறித்த விரிவான தரவுகளை பார்க்கலாம்.
செங்கோட்டையனின் நீண்டகால அரசியல் பயணம்
எம்.ஜி.ஆர் காலம் முதல் எடப்பாடி பழனிசாமி காலம் வரை இவர் வகித்த முக்கியப் பொறுப்புகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எம்.ஜி.ஆர் காலம்: 1977-ல் முதன்முறையாக சத்தியமங்கலம் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 முதல் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.

ஜெயலலிதா காலம் (1991-1996): போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
ஜெயலலிதா காலம் (2011-2012): விவசாயத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை (IT) மற்றும் வருவாய்த் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி காலம் (2017-2021): பள்ளிக் கல்வித் துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

முன்னாள் முதல்வர்களின் காலத்தில் பொதுப் பணித் துறை அமைச்சர்கள்
தமிழகத்தின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றான பொதுப் பணித் துறையை (Public Works Department) கடந்த காலங்களில் கையாண்டவர்களை பார்க்கலாம்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது பொதுப் பணித் துறை அமைச்சர்களாக ராமசந்திரன், முத்துச்சாமி ஆகியோர் இருந்தனர். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஓபிஎஸ், கே.வி.ராமலிங்கம் ஆகியோர் இருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் ஆகிய முக்கியத் துறைகளைத் தனது வசமே வைத்திருந்தார்.

தவெக அமைச்சரவையில் செங்கோட்டையன் ஏன்?
அனுபவம்: ஒன்பது முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனை படைத்தவர்.
நிர்வாகத் திறன்: பள்ளிக் கல்வித் துறையில் இவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் தவெக தலைவர் விஜய்யைக் கவர்ந்ததாகக் கூறப்படுகிறது.
பழைய கூட்டணி: அதிமுகவில் இருந்து விலகி விஜய்யுடன் இணைந்த செங்கோட்டையனுக்கு, அவரது சீனியாரிட்டியை மதிக்கும் வகையில் 'பவர்ஃபுல்' ஆன பொதுப் பணித் துறை வழங்கப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 1952-க்கு பிறகு அமையும் முதல் கூட்டணி ஆட்சியில், அனுபவம் வாய்ந்த ஒரு நிர்வாகி பொதுப் பணித் துறைக்கு வருவது ஆட்சிக்குத் தனி பலம் சேர்க்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
யார் இந்த செங்கோட்டையன்?
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதன் முறையாக 1977-இல் சத்தியமங்கலத்திலிருந்தும், அதன் பிறகு எட்டு முறை கோபிச்செட்டிபாளையத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. செயலலிதா அணி, சானகி அணி எனப் பிரிந்திருந்த போது செயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வென்றார். தற்போது 9ஆவது முறையாக கோபிசெட்டிபாளையத்தின் எம்எல்ஏவாக தேர்வான செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் மிகப ்பெரிய முகமாக இருந்த இவர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டார். அவர் மீதான ஒரு புகாரை கருத்தில் கொண்டு அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவியேற்றார். ஒருங்கிணைந்த அதிமுகவை தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் திமுக பக்கம் செல்வார் என எதிர்பார்த்த நிலையில் விஜய்யிந் தவெகவில் இணைந்தார். அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தார் விஜய். செங்கோட்டையனை வரவேற்று விஜய் வீடியோவே வெளியிட்டிருந்தார். அவருக்கு பிறகு இணைந்த ஜேசிடி பிரபாகர், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட யாருக்கும் இப்படி உருக்கமான வீடியோவை விஜய் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications