சென்னை: சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கடமை ஆற்றும்போது உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், காவலர் வீரவணக்க நாள் இன்று (அக்டோபர் 21) கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இருக்கும் காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் விஜய் இன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஜோசப் விஜய், டிஜிபி அலுவலகத்தை ஆய்வு செய்தார். மேலும், டிஜிபி அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார் முதல்வர் விஜய். இந்த நிகழ்வில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "1959-ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைப் போற்றும் காவலர் வீரவணக்க நாளில், நாட்டில் அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் நிலைநாட்டும் உயரிய கடமையில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த காவல் துறையினர் அனைவருக்கும் வீர வணக்கங்கள்! இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், குற்றச் சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்கள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, துணிவுடனும், விழிப்புடனும் பணியாற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. கடமையின் பாதையில் இன்னுயிர் நீத்து, அமரர்களான வீரத் தியாகிகளுக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துவதோடு, காலநேரம் கருதாமல், அயராது உழைத்து, நாட்டின் அரணாகத் திகழும் காவல் துறையினரின் உன்னதப் பணிகளைப் போற்றிடுவோம்!" எனத் தெரிவித்துள்ளார்.