மதுபான பார்களுக்கு புதிய டெண்டர்.. அக்டோபர் முதல் வாரத்தில் விட டாஸ்மாக் திட்டம்!

  • சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளில் பார் நடத்துவதற்கான புதிய ஒப்பந்தங்கள் வழங்குவதற்கான டெண்டர் அக்டோபர் முதல் வாரத்தில் கோரப்பட உள்ளது. இதுவரை பார்களை நடத்தி வருபவர்களை விடுத்து புதியவர்கள் டெண்டர் எடுப்பதற்காக சில விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை அரசின் டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 4,048 கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மதுக்கடைகளை ஒட்டியுள்ள காலியிடங்களில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்காக தனியாருக்கு பார் உரிமம் வழங்கப்படுகிறது.

    Advertisement

    தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2,638 டாஸ்மாக் பார்கள் இயங்கி வருகின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கான பார் ஒப்பந்தம், இந்த ஆண்டு ஜனவரியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, சட்டசபை தேர்தல் காரணமாக மதுக்கூடங்களுக்கான ஒப்பந்த காலம் முதலில் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    உரிமக் காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய ஒப்பந்தங்கள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. அக்டோபர் 31 ஆம் தேதி வரை பார் உரிமம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, புதிதாக பார் ஒப்பந்தம் வழங்குவதற்காக அடுத்த மாதம் முதல் வாரத்தில் டெண்டர் கோரப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    இதுவரை மதுக்கூடங்களுக்கான டெண்டரில், சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளரிடம் இருந்து தடையில்லா சான்று பெறுவது கட்டாயம் என்ற நிபந்தனை இருந்து வந்தது. பல இடங்களில் கட்டட உரிமையாளர்களே மதுக்கூடங்களை நடத்தி வருவதால், புதியவர்களுக்கு தடையில்லா சான்று கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்தது.

    இதன் காரணமாக, கடந்த 20 ஆண்டுகளாக குறிப்பிட்ட சில நபர்களே பார்களை நடத்தி வருவதாக தெரிகிறது. இதனால், இந்த முறை விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, இனிமேல் மதுக்கடையை ஒட்டியுள்ள இடத்திலோ அல்லது மதுக்கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள இடத்திலோ மதுக்கூடம் அமைக்கலாம். இதன் மூலம் புதியவர்களுக்கும் மதுக்கூடங்களுக்கான ஒப்பந்தம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

    Advertisement

    மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அண்மையில் அளித்த பேட்டியில், அக்டோபர் 5 ஆம் தேதி டெண்டர் திறக்கப்பட உள்ளது. அதில், விதிமுறைகளின்படி தகுதி பெறும் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்படும். அதன்பிறகு சுமார் 5 அல்லது 6 நாட்கள் ஆவணப்பணிகள் நடைபெற்று, திட்டம் நடைமுறைக்கு வரும். டாஸ்மாக் நிர்வாகத்தில் முழுமையான மாற்றத்தை கொண்டு வருவதில் அரசு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது எனத் தெரிவித்தார்.

    மேலும், டாஸ்மாக் கடைகளின் விற்பனையை அதிகரிப்பது அரசின் நோக்கம் அல்ல. டாஸ்மாக்கில் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்வது போன்ற விதிமீறல்கள் நடைபெற்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பார் டெண்டர் வரும் போது அதில், டாஸ்மாக் பார்களில் உணவு கூடம் நடத்திக் கொள்ளலாம் என்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

    English Summary

    Tenders for awarding new contracts to operate bars at TASMAC liquor outlets are set to be invited in the first week of October.