சென்னை: சமீபத்தில் இடதுசாரி மாணவர்களுக்கு எதிரான அறிக்கையை கல்லூரி கல்வித்துறை தரப்பில் வெளியாகியிருந்தது. இதற்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால், தலைமை செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தின் முடிவின் அடிப்படையில்தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும்.. பின்னர் எதற்காக கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்கப்பட வேண்டும்? என்றும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
இடதுசாரி மாணவர் அமைப்புகள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை தடை செய்ய அனைத்து நிர்வாக அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் கல்லூரி கல்வித்துறையிலிருந்து உத்தரவு வந்திருந்தது.
மொத்த நாடும் நீட் முறைகேடுகளுக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த போது.. தமிழகத்தில் இடதுசாரி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் விஜய் தலைமையிலான தவெக அரசு.. நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக சொல்லிக்கொண்டாலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தேடி தேடி கைது செய்தது. அப்படியெனில் அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? என இடதுசாரி கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தன. விஜய் முதலமைச்சராக ஆதரவு கொடுத்தது இடதுசாரிகள்தான். ஒருவேளை இடதுசாரிகளின் ஆதரவு இல்லை எனில்.. இன்று விஜய் முதலமைச்சராகியிருக்க முடியாது. நிலைமை இப்படி இருக்கிறது என்று தெரிந்தும் கூட.. ஏன் இடதுசாரிகளை அரசு அதிகாரிகள் சீண்டுகின்றனர்? என்று சிபிஐ (CPI), சிபிஎம் (CPM) கேள்வி எழுப்பியுள்ளன. இந்நிலையில், இடதுசாரி மாணவர் அமைப்புகள் குறித்த உத்தரவ என்பது கல்வித்துறை இணை இயக்குநர் தன்னிச்சையாக அனுப்பியது கிடையாது. தலைமை செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில்தான் எடுக்கப்பட்டது என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கூறியிருக்கிறது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், "தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்ட முடிவை கல்லூரிகளுக்கு அனுப்பிய கல்லூரிக்கல்வி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். விளக்கம் கேட்கும் கடிதத்தை உடனே திரும்பப்பெற தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இடதுசாரி கட்சிகளின் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்துவதை தடுக்க வேண்டும் என தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவின் படி, கல்லூரிக்கல்வி இயக்குநருக்கும், தொழில் நுட்பக் கல்வி இயக்குநருக்கும், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, இது குறித்து 20.08.2026 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான தகவலை வழங்க வேண்டும் என உயர்கல்வித் துறை சிறப்புச் செயலர் அனுப்பிய சுற்றறிக்கையின் அடிப்படையில், அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிய கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் முனைவர். சிந்தியா செல்வியிடம் விளக்கம் கேட்டிருப்பதை தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். கல்லூரிக்கல்வி இயக்குநருக்கு, தொழில் நுட்பக்கல்லூரி இயக்குநருக்கு, அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிய உயர்கல்வித் துறை சிறப்புச் செயலர் அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுள்ளார். அவ்வாறெனில் அவரிடம் விளக்கம் கேட்கப்படாத போது, உயர்கல்வித்துறை சிறப்புச் செயலர் அனுப்பிய சுற்றறிக்கையை 19.08.2026 அன்று திரும்பப்பெற்ற நிலையில், இடதுசாரிக் கட்சியை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்று தலைமைச்செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்ட முடிவை சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் இயக்கும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் அனுப்பி 20.08.2026 அன்றுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, உயர்கல்வித்துறை சிறப்புச்செயலருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள சென்னை பல்கலைக் கழக பதிவாளருக்கு விளக்கம் கேட்கப்படாத போது, கல்லூரிக்கல்வி இணை இயக்குநரிடம் மட்டும் விளக்கம் கேட்கப்பட்டதன் நோக்கம் தெரியவில்லை. மேற்குறிப்பிட்ட மூவருமே, தங்கள் மேலதிகாரிகளிடமிருந்து வந்த தகவலுக்கு நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை செய்தவர்களே. எனவே, அரசின் சுற்றறிக்கைக்கு, நடவடிக்கை எடுக்க முற்பட்டவரிடம் விளக்கம் கேட்பது என்பதையும், ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் கல்லூரிக்கல்வி இணை இயக்குநரரை பொறுப்பாக்குவதையும் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு வழங்கப்பட்ட விளக்கம் கேட்கும் கடிதத்தை திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.நீட் போராட்டம்
இடதுசாரிகளின் கேள்வி
ஆசிரியர் கழகம் கண்டனம்
கண்டனம் தெரிவித்த ஆசிரியர் கழகம்
திரும்பப் பெறப்பட்ட அறிக்கை
அதிகாரிகள் சொன்னதைதான் செய்தோம்