சென்னை: நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்திற்காக 4 நிறுவனங்களிடம் இருந்து கேக் கொள்முதல் செய்வதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 62 லட்சத்து 46 ஆயிரத்து 412 கேக் துண்டுகள் ரூ.7.54 கோடிக்கு தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய உள்ளது.
அரசியலில் கால் வைத்த நாளில் இருந்தே குழந்தைகளிடம் தன்னை மாமா என்று அழைக்குமாறு அடையாளப்படுத்தி வருகிறார். தவெகவினரும் ஒவ்வொரு அரசுப் பள்ளியாக சென்று விஜய் மாமா என்று மாணவர்கள் மனதில் அந்தப் பெயரை பதிய வைக்க முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகள் தினமான நவம்பர் 14ஆம் தேதியன்று தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு கேக் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக 62.46 லட்சம் கேக்குகள் வாங்க முடிவு செய்யப்பட்டு ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் அந்த கேக்குகள் 30 நாட்கள் கெட்டு போகாமல் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு டெண்டர் வெளியிடப்பட்டது. தற்போது நவம்பர் 14ஆம் தேதி இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில், டெண்டர் 4 நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 62.46 கேக்குகள் ரூ.7.54 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட உள்ளன. எலைட் நேச்சுரல், டிரீம் பேக், பிரிட்டானியா மற்றும் ஐடிசி ஆகிய 4 நிறுவனங்கள் இந்த கேக் கொள்முதல் செய்யும் பணி ஆணையை பெற்றுள்ளன. இதில் எலைட் நேச்சுரல் நிறுவனம் ஒரு கிராம் கேக்கை 0.24 பைசா என்று 10 லட்சத்து 6 ஆயிரத்து 861 கேக்குகளை ரூ.1.14 கோடிக்கு வழங்க உள்ளன. அதேபோல் டிரீம் பேக் நிறுவனம் ஒரு கிராம் கேக்கை 0.24 பைசாஅ என்று 33 லட்சத்து 87 ஆயிரத்து 459 கேக்குகளை ரூ.3.84 கோடிக்கு கொடுக்க உள்ளன. பிரிட்டானியா நிறுவனம் ஒரு கிராம் கேக்கை 0.27 பைசா என்று 10 லட்சத்து 3 ஆயிரத்து 996 கேக்குகளை ரூ.1.28 கோடிக்கும், ஐடிசி நிறுவனம் 0.28 பைசா என்று 8 லட்சத்து 48 ஆயிரத்து 96 கேக்குகளை ரூ.1.08 கோடிக்கு வழங்க உள்ளன. மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நிறுவனமும் கேக்குகளை மாணவர்களுக்கு வழங்க இருக்கிறது. இந்த டெண்டரும் கூட தமிழக அரசால் குறைந்த விலைக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், முதல்வர் அலுவலக புணரமைப்பு பணிகள் உள்ளிட்ட டெண்டர் குறைந்த விலையில் எடுக்கப்பட்ட நிலையில், கேக் டெண்டரும் குறைந்த விலையில் கொடுக்கப்பட்டுள்ளது.