சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம் தவெகவுக்கு சாதகமாக இல்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். தவெகவின் 4 மாத கால ஆட்சியில் மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்யவே முதல்வர் விஜய் 2 நாட்கள் ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம் செய்வதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. முதல்வர் விஜய் இரு தொகுதிகளிலும் ஏற்கனவே பிரச்சாரக் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டார். அடுத்ததாக இன்று மதுராந்தகம் தொகுதியில் ரோடு ஷோ மேற்கொள்ளவுள்ளார். நகரப் பகுதிகள் மட்டுமல்லாமல் 39 கிராமங்களிலும் விஜய் ரோடு ஷோ செல்ல இருக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே ஸ்டாலின் தோற்றுவிட்டதாக சொல்லும் தவெக தலைவர் விஜய், இடைத்தேர்தலுக்காக அதிகம் உழைப்பது ஏன் என்ற கேள்வி அக்கட்சியினர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனால் களம் தவெகவுக்கு சாதகமாக இல்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் விஜய்யின் பிரச்சாரம் தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், சட்டசபைத் தேர்தலின் போது விஜய் இப்படியெல்லாம் பிரச்சாரம் செய்யவில்லை. திட்டமிட்ட பிரச்சாரம் என்பதே அப்போது இல்லை. இருந்தாலும் வெற்றி பெற்றார்கள். ஆனால் இடைத்தேர்தல் அவர்களுக்கு அப்படியில்லை. 2 முறை இரு தொகுதிகளுக்கும் செல்கிறார். ஆகவே அந்த அளவிற்கு களம் தவெகவுக்கு சாதகமாக இல்லை. இதன் காரணமாகவே இருமுறை களத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாகவே இரு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு சாதகமாக இருந்திருக்கின்றன. அதனால் திடீரென மாற்றம் நடக்கும் என்று தவெக நம்பவில்லை. 4 மாதங்களில் தவெக மீது அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்து தோற்றால் எப்படி என்ற கவுரவ பிரச்சனை காரணமாக முதல்வர் விஜய் 2 முறை பிரச்சாரத்திற்கு செல்கிறார். ஒட்டுமொத்த அமைச்சரவையும் தொகுதிகளில் தான் முகாமிட்டுள்ளார்கள். களம் சவாலாக இருக்கிறது. ஆனால் தவெக எளிதாக வெல்லும் நிலையில் இல்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.