1 ஓட்டில் தோல்வி.. பெரியகருப்பன் வழக்கில் ட்விஸ்ட்! உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!
சென்னை: திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே ஆர் பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், தபால் வாக்கு வேறு மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்ற நிலையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் போட்டியிட்டார். அவருக்கு எதிராக தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக சீனிவாச சேதுபதி களமிறங்கினார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் பெரியகருப்பன் 83 ஆயிரத்து 364 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 365 வாக்குகள் பெற்று ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த மிக குறைந்த வாக்கு வித்தியாசம் தேர்தல் முடிவு தொடர்பாக பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். அதில், தனது தொகுதிக்கான ஒரு தபால் வாக்கு தவறுதலாக வேறு திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகவும், அந்த வாக்கு தனது தொகுதி கணக்கில் சேர்க்கப்படாததால் தேர்தல் முடிவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், அந்த தபால் வாக்கை மீட்டு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும், வழக்கு முடிவடையும் வரை சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சீனிவாச சேதுபதி பங்கேற்க இடைக்கால தடை விதித்தது.
"ஒரே ஒரு வாக்கு அரசின் நிலையை தீர்மானிக்கக்கூடிய சூழல் இருக்கும்போது நீதிமன்றம் மௌனமாக இருக்க முடியாது" என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த உத்தரவு வெளியாகியதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில், தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு இன்று தமிழக சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழக சட்டசபை எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 232 ஆக குறைந்துள்ளது. மொத்தம் 234 சட்டசபை உறுப்பினர்கள் உள்ள நிலையில் திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நிலையில் ஒரு உறுப்பினரின் வாக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து சீனிவாச சேதுபதி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும் உரிமையை மறுப்பது தவறு என்றும், தேர்தல் முடிவை எதிர்த்து தொடர வேண்டியது தேர்தல் மனுவே தவிர ரிட் மனு அல்ல என்றும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது.
மற்றொரு பக்கம், பெரியகருப்பன் தரப்பும் முன்கூட்டியே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தங்களது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தபோது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்க தடை விதித்தது தவறானது என சீனிவாச சேதுபதி தரப்பு வாதிட்டது. இந்த நிலையில் வழக்கின் இரு தரப்பையும் கேட்ட உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் உயர் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications