உதயநிதி மாதிரியே! சால்வைக்கு பதில் புத்தகம் கேட்டது போல்! ஆதவ் அர்ஜுனா கேட்டது என்ன தெரியுமா?
சென்னை: நான் ஒரு விளையாட்டு வீரர், எனக்கு சால்வை எல்லாம் கொடுக்காதீங்க, என்னை பார்க்க வரும் போது பந்து கொண்டு வந்து கொடுங்கள் என பொதுப் பணித் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலகலப்பாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் சமீபத்தில் வெளியாகி, மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இதில், தமிழகத்தின் பொதுப் பணித் துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா, பொறுப்பேற்ற உடனே களத்தில் இறங்கித் தனது பணிகளைத் தொடங்கியுள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆதவ் அர்ஜுனா, சென்னை நேரு உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் காலை 7 மணிக்கே அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தமக்கு வாழ்த்து தெரிவிக்க சால்வைகளுடன் வந்தவர்களிடம், "நான் ஒரு விளையாட்டு வீரர். எனக்குச் சால்வை எல்லாம் வேண்டாம், பந்து கொண்டு வாருங்கள்," என்று கலகலப்பாகக் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் வெறுமனே இந்தத் துறைக்கு அமைச்சர் மட்டுமல்ல; இதே நேரு விளையாட்டு அரங்கில் தங்கி, விடுதி மாணவராகப் பயிற்சி பெற்றவன். அதனால் இந்த இடம் என் சொந்த வீடு போன்றது" என்று தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஆய்வின் போது மைதானத்தின் கட்டுமானப் பணிகள், அங்குள்ள வீரர் மற்றும் பயிற்சியாளர்களின் தேவைகள் குறித்தும் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் தற்போது பெருகி வரும் போதைப்பொருள் கலாச்சாரத்தை எதிர்கொள்ள விளையாட்டுத் துறை மிக முக்கியப் பங்காற்ற முடியும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார்.
இதற்கு உலகளாவிய உதாரணம் ஒன்றைச் சுட்டிக்காட்டிய அவர், "முன்பு பிரேசில் நாட்டில் போதைப்பழக்கம் மிக அதிகமாக இருந்தது. அதை ஒழிக்க அந்த நாட்டு அரசு விளையாட்டுத் துறைக்கு அசாத்திய முக்கியத்துவம் கொடுத்தது. அதன் விளைவாக இன்று அத்துறை அங்கு முதலிடத்தில் உள்ளது" என்றார்.
அதேபோல, தமிழகத்திலும் போதைப்பழக்கத்தை ஒழிக்கப் பள்ளிக் கல்வியிலிருந்தே விளையாட்டின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
நமது தற்போதைய பள்ளிக்கல்வி முறை சர்வதேசப் போட்டிகளில் வெல்வதற்கான வழியைக் கற்றுக்கொடுப்பதில்லை என்றும், ஒலிம்பிக் போட்டிகள் குறித்த முறையான புரிதல் இன்னும் நம் வீரர்களிடம் இல்லை என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வேதனை தெரிவித்தார்.
இதனை மாற்றியமைக்க, பத்து வயதிலிருந்தே குழந்தைகள் ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவதற்கான முறையான பயிற்சித் திட்டங்களை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது மாணவர்களின் கல்வி அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் விளக்கினார்.
தமிழக விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அமைச்சர் முன்வைத்துள்ள முக்கியத் திட்டங்கள்:
பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம்: தமிழ்நாட்டின் அனைத்துக் கிராமங்கள் மற்றும் மாவட்டங்களில் விளையாட்டை விரிவுபடுத்துவதோடு, ஜல்லிக்கட்டு, சிலம்பம் போன்ற நமது பாரம்பரிய விளையாட்டுகளையும் அரசு தீவிரமாக ஊக்குவிக்கும்.
சர்வதேசப் போட்டிகளை நடத்துதல்: உத்தரகாண்ட் போன்ற சிறிய மாநிலங்கள் கூட தேசியப் போட்டிகளை நடத்தும் போது, தமிழகம் இன்னும் அதைச் செய்யவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய அமைச்சர், முதலமைச்சரின் வழிகாட்டுதலோடும், மத்திய அரசுடன் பேசியும் தமிழகத்தில் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நிச்சயம் நடத்தப்படும் என்றார்.
மைதானங்கள் சீரமைப்பு: தமிழகத்தில் தற்போது 25,000 முதல் 35,000 பேர் வரை அமரக்கூடிய பிரம்மாண்டமான விளையாட்டு அரங்குகள் இல்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விளையாட்டு கட்டமைப்புகளைச் சீரமைத்து, சர்வதேச தரத்திலான வசதிகளை உருவாக்கத் தனது துறை முழு வீச்சில் செயல்படும்.
"தமிழகம் ஆரோக்கியமான மாநிலமாக மாற, அனைவரும் விளையாட வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ள புதிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த அதிரடித் தொடக்கம், தமிழக விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சராகவும் துணை முதல்வராகவும் இருந்த உதயநிதியை பார்க்க வருவோர் பொன்னாடை, பூங்கொத்து உள்ளிட்டவைகளை வாங்கி வந்த போது உதயநிதி, இதையெல்லாம் வாங்கி வர வேண்டாம், புத்தகமாக கொடுத்தால் அரசு பள்ளி நூலகங்களுக்கு கொடுக்க வசதியாக இருக்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications