கன்னித்திரை கிழிந்திருந்தால்.. பாலியல் வன்கொடுமையாக கருதப்படாதா? ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
டெல்லி: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே கன்னித்திரை கிழிந்திருந்ததால், அவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார் என்று கணக்கில் வராது என சொல்லப்பட்டிருந்த நிலையில், இது குறித்து முக்கிய தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் தற்போது கொடுத்திருக்கிறது.
கடந்த 1982-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் ராகேஷ் என்பவருக்கு 1983-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து ராகேஷ் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணையில்தான் உயர்நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

நடந்தது என்ன?
கடந்த 1982ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் காலை 9.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. 15 வயது எழுத படிக்க தெரியாத சிறுமி ஒருவர், இயற்கை உபாதையை கழிக்க ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் இடத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அவரை வழிமறித்த ராகேஷ் மற்றும் அவரது கூட்டாளி.. இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். சிறுமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அடித்து சித்திரவதை செய்திருக்கிறார்கள்.
புகாரும் ஆதாரமும்
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வாய்மொழி சாட்சியத்தையும், மருத்துவ அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றனர். சிறுமிக்கு சிராய்ப்புகள், வீக்கங்கள் என மொத்தம் 6 இடங்களில் காயம் இருந்தது. இதையடுத்து, கீழமை நீதிமன்றம் சாட்சியத்தை கருத்தில் கொண்டு ராகேஷ் மற்றும் அவரது கூட்டாளி இருவரையும் குற்றவாளி என அறிவித்தது.
இருப்பினும் இந்த உத்தரவை எதிர்த்து ராகேஷ், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கு நீதிபதி சந்தோஷ் ராய் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
பிற்போக்குத்தனமான வாதம்
ராகேஷ் தரப்பு வழக்கறிஞர், சிறுமியின் மருத்துவ அறிக்கையை மேற்கோளிட்டு தனது வாதங்களை அடுக்கினார். அதாவது சிறுமியின் கன்னித்திரை பழையதாகவும், கிழிந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினார். இது ஏற்கனவே அந்த சிறுமி, மற்றவர்களுடன் உடலுறவு கொள்ள பழகியவர் என்பதை உறுதி செய்வதாகவும், எனவே எனது கட்சிக்காரர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்றும் கூறியிருந்தார்.
கண்டனம் தெரிவித்த நீதிபதி
வாதங்களை கேட்ட நீதிபதி சந்தோஷ் ராய் தீர்ப்பை வாசித்தார். அப்போது அவர் கூறிய கருத்துக்கள்தான் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக இருக்கின்றன. முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குணநலன்களை தவறாக சித்தரிக்க முயன்றதை நீதிபதி கடுமையாக கண்டித்திருந்தார். மேலும், பாலியல் வன்கொடுமை என்பது, என்பது ஒரு சட்டப்பூர்வமான சொல், அது மருத்துவச் சொல் அல்ல என்று தெளிவுபடுத்தினார்.
கன்னித்திரை குறித்த கருத்து
மட்டுமல்லாது, பெரும்பாலும் பாலியல் வன்கொடுமைகள் மறைவான இடங்களில்தான் நடக்கின்றன என்பதால், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் உண்மையானதாக இருக்கும்போது, மருத்துவ காரணங்களை கொண்டு அதை மறுக்க முடியாது என்று தெளிவாக கூறினார்.
இது போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கன்னித்திரை, ஏற்கனவே கிழிந்திருந்தது என்பதற்கு.. பாலியல் உறவு மட்டுமே காரணம் அல்ல. விளையாட்டு, சைக்கிள் ஓட்டுதல், ஜிம்னாஸ்டிக்ஸ், குதிரை சவாரி, கடினமான உடல் உழைப்பு அல்லது விபத்து போன்ற பல்வேறு காரணங்களால் அது நிகழலாம். சில பெண்களுக்குப் பிறப்பிலேயே அது இல்லாமலும் இருக்கலாம்.
எனவே, 'பழைய கிழிந்த திரை' என்பதைக் காட்டி, பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே உடலுறவில் பழக்கப்பட்டவர் என்று கூறி குற்றவாளிக்குச் 'சந்தேகத்தின் பலனை' கொடுத்து அவரை விடுவிக்க முடியாது என்றும் நீதிபதி கறாராக கூறினார்.
தண்டனை உறுதி
குற்றவாளி ராகேஷின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்திருந்தாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக இந்த வழக்கு இருப்பதாக.. பல்வேறு தரப்பினரும் தீர்ப்பை வரவேற்றிருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியமே ஒரு வழக்கில் தண்டனை வழங்கப் போதுமானது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications