வெங்கட் நாராயணா நியமனம்.. விசிக சொல்லும் சமாதானம்! விளக்கம் கொடுத்த திருமாவளவன்!
சென்னை: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக 'ஜன நாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டதற்கு, தவெக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "இது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் தந்திருக்கிறார். சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர், முதல்வருக்கு நம்பிக்கைக்கு உரியவர். அதனால்தான் அந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

எந்த பாதிப்பும் வராது
சிறப்பு பிரதிநிதி என்கிற பொறுப்பு, ஆட்சி நிர்வாகத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கிற பொறுப்பு அல்ல! எனவே அந்த பொறுப்பை முதலமைச்சர் தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய தோழருக்கு கொடுத்திருப்பதாக விளக்கம் சொல்லியிருக்கிறார். இது அரசு பதவியாக இருந்தாலும் கூட, நியமன அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கிறது. இந்த நியமனம் மூலம் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்கிற கருத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.
சிபிஐ எதிர்ப்பு
முன்னதாக தவெக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. "தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, கர்நாடக அரசியல் செல்வாக்குடன், பெங்களூருவை மையமாகக் கொண்டு தொழில் நடத்தி வரும் திரு வெங்கட் கே. நாராயணா நியமனம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நியமனம் தமிழ்நாட்டில் வாதப்பிரதிவாதத்தை உருவாக்கி, கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
புரிதல் இல்லை
தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைகள் பற்றிய புரிதலிலும், கலை, இலக்கியம், பண்பாட்டு துறைகளிலும் போதிய புரிந்து கொள்ளல் இல்லாத ஒருவர், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அவரது நியமனத்தை மறுபரிசீலனை செய்து, பொருத்தமான பிரதிநிதியை நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசின் முதலமைச்சரை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது." என்று அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications