தைவானில் இருந்து வந்த 8 பேர் டீம்! நெல்லை, தூத்துக்குடிக்கு வந்த குழு.. ₹80000 கோடி முதலீடு வருது!
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்த நிலையிலும் தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், தைவான் நாட்டைச் சேர்ந்த 8 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் திங்கள்கிழமை (நாளை) திருநெல்வேலிக்கு வருகை தருகின்றனர். நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொழில் வாய்ப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக இந்த அதிரடி விசிட் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தின் (TIDCCI) தலைவர் குணசிங் செல்லத்துரை செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசினார். அப்போது, தைவான் நாட்டைச் சேர்ந்த மூன்று முன்னணி நிறுவனங்கள் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தங்களது புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டார். இந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த திட்டமிடப்பட்ட முதலீட்டு மதிப்பு சுமார் 80,000 கோடி ரூபாய் இருக்கும் என தற்காலிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட முதலீடு தென் தமிழக இளைஞர்களுக்குப் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு வசதிகள் தீவிர ஆய்வு:
தைவான் தூதுக்குழுவின் இந்த வருகை ஒரு பூர்வாங்க (Preliminary) ஆய்வுப் பணியாகும். ஒரு பெரிய முதலீட்டைச் செய்வதற்கு முன்னதாக, அந்தப் பகுதியில் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதை இந்த குழுவினர் மதிப்பிட உள்ளனர்.
அதன்படி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொழில்சார் உள்கட்டமைப்பு வசதிகள், தொழிற்சாலைகளுக்குத் தடையின்றி கிடைக்கக்கூடிய குடிநீர் வசதி, சாலைப் போக்குவரத்து இணைப்புகள், தங்குதடையற்ற மின்சார விநியோகம் ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
மேலும், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் (Export potential), தூத்துக்குடி வி.ஓ.சி. துறைமுகத்தின் செயல்பாடு, வான்வழிப் போக்குவரத்து வசதிகள் (Air connectivity) மற்றும் ஏற்கனவே இப்பகுதியில் வெற்றிகரமாக இயங்கி வரும் பிற தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் குறித்தும் அவர்கள் விரிவான தரவுகளைச் சேகரிக்கவுள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி சிப்காட் வளாகங்களுக்கு விசிட்:
திட்டமிட்டபடி திங்கள்கிழமை நெல்லை வந்தடையும் தைவான் குழுவினர், தங்களது இரண்டு நாள் கள ஆய்வைத் தொடங்குகின்றனர். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் (SIPCOT) வளாகம் மற்றும் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு இந்த குழுவினர் நேரில் செல்லவிருக்கிறார்கள்.
அங்குள்ள நில அமைவு, போக்குவரத்து வசதி மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை அவர்கள் பார்வையிடுகின்றனர்.
தென் தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடியில் அண்மைக்காலமாக விண்வெளித் தொழில் பூங்கா, மின்சார வாகன உற்பத்தி அலகுகள் (EV plants) எனப் பல பெரிய திட்டங்கள் கால்பதித்து வரும் வேளையில், தைவான் நாட்டின் இந்த ரூ.80,000 கோடி முதலீட்டு முயற்சி ஒட்டுமொத்த தமிழக தொழில் துறையினரிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. இந்த ஆய்வு வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications