இறந்த பின்னும் இத்துணை கத்திகள் பாயுமெனில் எத்துணை பெரியதுன் கொள்கை? கலைஞர் குறித்து வைரமுத்து

  • சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து அவரது நினைவு நாளில கவிஞர் வைரமுத்து ஒரு கவிதை எழுதி உள்ளார். இறந்த பின்னும் இத்துணை கத்திகள் பாயுமெனில் எத்துணை பெரியதுன் கொள்கை என்று கேள்வி எழுப்பியபடி அந்த கவிதை தொடங்குகிறது.

    Advertisement

    தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் கலைஞர் கருணாநிதி 50 ஆண்டுகளாக தவிர்க்கவே முடியாத ஆளுமையாக விளங்கினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வயோதிகத்தில் வரும் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

    Advertisement

    இதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ள அமைதிப் பேரணி நடககிறது. இன்று காலை சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டது. இதனைத்தொடர்ந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.

    இந்த அமைதிப் பேரணியில், முன்னாள் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க.வின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளார்கள். பலரும் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    Advertisement

    அந்த வகையில் வைரமுத்து வெளியிட்ட கவிதையில்,

    "இறந்த பின்னும்
    இத்துணை கத்திகள் பாயுமெனில்
    எத்துணை பெரியதுன் கொள்கை?

    உன் சமாதியையும்
    கொலைசெய்யத் துடிக்கும் ஒரு
    கூட்டமெனில்
    எத்துணை வலியதுன் வாழ்வு?

    உன்மீது அடித்த புயல்
    மண்மீது அடித்திருந்தால்
    இமயமலை சற்றே
    இடம் பெயர்ந்திருக்கும்

    உன்மீது அடித்த வெயில்
    கடல்மீது அடித்திருந்தால்
    பாதிச் சமுத்திரம்
    பாலையாய்ப் போயிருக்கும்

    நீயோ
    புயலில் சவாரி செய்தாய்
    வெயிலைச் சமாதி செய்தாய்

    உன் உறுதியும் தீவிரமும்
    இறுதிவரை வேண்டும்
    இளைய தலைமுறைக்கு

    கலைஞரய்யா!

    கல்லறைக்கு
    மலரேந்தி வந்தேன்

    கண்ணுறக்கம் கலையுமென்று
    காம்புகள் கிள்ளி
    இதயத்தில் தூவுகிறேன்
    இதழ்களை மட்டும்

    #கலைஞர்" இவ்வாறு வைரமுத்து அந்த கவிதையில் கூறியுள்ளார்.

    English Summary

    Kalaignar Karunanidhi's 8th death anniversary: ​​Vairamuthu's moving poem about Kalaignar Karunanidhi. கலைஞர் கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு நாளில் வைரமுத்து உருக்கமான கவிதை