சென்னை: தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்கள் , ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு , உற்பத்தித் துறை மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழக அரசு இன்று 4 முன்னணி சர்வதேச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், இன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன வளாகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கும் இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Chubb, ஜெர்மனியைச் சேர்ந்த Nordex, மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (University of Western Australia) மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த MotiveLink ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றன. இந்த முதலீடுகள் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தித் துறை மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியவை என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சி மேலும் வேகமடைவதுடன், 2,920-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறன் மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியவற்றிலும் இந்த ஒப்பந்தங்கள் முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தமிழ்நாட்டை உலகளாவிய முதலீட்டாளர்களின் விருப்பமான மாநிலமாக மாற்றும் நோக்கில் அரசு தொடர்ந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்து வருகிறது. அந்த முயற்சியின் தொடர்ச்சியாகவே இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் திறன் சார்ந்த பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்கள், தமிழ்நாட்டின் முதலீட்டு சூழலுக்கு மேலும் வலுசேர்க்கும்" என கூறப்பட்டுள்ளது.