"விஜய் என்னும் நான்.." 10 மணிக்கு பதவியேற்பு.. 5 மணிக்கே மைதானத்திற்கு சென்ற வீரர்கள்! பின்னணி
சென்னை: தமிழக அரசியலில் இன்று ஒரு முக்கியமான நாள். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கத் தயாராகிவிட்டார். ஆனால், இந்த நிகழ்வால் வீரர்களுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். 'இந்தியன் ஓபன் அத்லெட்டிக்ஸ் சீரிஸ்-6' பங்கேற்கும் வீரர்களுக்கு இதனால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்குத் தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்கிறார். இந்த மெகா நிகழ்வின் எதிரொலியாக, அதற்கு அடுத்தே உள்ள மைதானத்தில் நடக்கும் 'இந்தியன் ஓபன் அத்லெட்டிக்ஸ் சீரிஸ்-6' போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விஜய்யின் பதவியேற்பு விழாவிற்குப் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிவார்கள் என்பதால், சென்னை மாநகரமே போக்குவரத்து நெரிசலில் திணறப்போகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு தடகள சங்கம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது காலை 6 மணி முதல் 7.30 மணி வரை போட்டிகள் உள்ள வீரர்கள், விடியற்காலை 5 மணிக்கே மைதானத்திற்கு வந்துவிட வேண்டும். காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை போட்டிகள் உள்ளவர்கள், 6.30 மணிக்குள் மைதானத்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவுக்காகக் குவிக்கப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளால், வீரர்கள் தங்கள் வழக்கமான பயிற்சிகளைத் தொடங்குவதற்கே பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. வீரர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மைதானத்திற்கு வரத் தாமதமானால், போட்டிகள் தள்ளிவைக்கப்படலாம் அல்லது மாற்று நேரத்தில் நடத்தப்படலாம் என அத்லெட்டிக்ஸ் சங்கச் செயலாளர் லதா தெரிவித்துள்ளார்.
காலை 10.30 மணிக்குப் பெண்களுக்கான வட்டு எறிதல் இறுதிப்போட்டி, 10.35 மணிக்கு 100 மீட்டர் தடை ஓட்டம் எனப் பல முக்கியப் போட்டிகள் பதவியேற்பு விழாவிற்கு இணையான நேரத்திலேயே நடக்கவுள்ளன.
சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், வெளியூரிலிருந்து வந்துள்ள வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்குமிடங்களிலிருந்து மைதானத்தை அடைவது ஒரு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. இரவு 8.55 மணி வரை போட்டிகள் நீடிக்கும் என்பதால், இன்றைய நாள் தடகள வீரர்களுக்குச் சிக்கலாகவே இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications