கோவை ஆர்எஸ்புரத்தில் சட்டென விழுந்த ராட்சத மரம்.. கண் இமைக்கும் நேரத்தில் மேஜிக்.. 3 பேர் திக் திக்

  • கோவை: கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைமந்துள்ளது. ஆர்எஸ்புரத்தில் ஒரு பெரிய மரம் சாலையில் வேரோடு சாய்ந்தது. அதிகாரிகள் 3 மணி நேரம் போராடி மரத்தை அகற்றினர்.
    இந்த விபத்தில், அந்த வழியாக சென்ற மூன்று பேர் நூலிழையில் உயிர் தப்பினர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது. மக்கள் கவனமாக இருக்க கோவை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

    Advertisement

    கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்கிறது. கடந்த 18 ஆம் தேதி இரண்டு மணி நேரத்தில் சுமார் 20 செ.மீ மழை பெய்தது. நேற்று, நேற்று முன்தினமும் மழை பெய்தது. இதனால் மாநகர் புறநகர் பகுதிகளில் சாலையில் வெள்ளம் போல மழைநீர் ஓடியது. குண்டும், குழியுமாக இருந்த சாலைகள் மேலும் பாதிப்படைந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்தன.

    Advertisement

    கண் இமைக்கும் நேரத்தில் மேஜிக்

    கோவையில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் காற்றின் தாக்கம் காரணமாக மரங்கள் பலவீனமடைந்து சாய்ந்து விழுந்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோவை சுமார் 10க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆர்.எஸ்.புரம், டி.பி ரோடு பகுதியில் நேற்று எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய மரம் திடீரென வேரோடு சாலையில் சரிந்தது. மாநகரின் பல பகுதிகளை இணைக்கும் சாலையில் நடந்த சம்பவத்தால் போக்குவரத்து முடங்கியது. மாநகராட்சி, தீயணைப்பு, காவல்துறை, வருவாய் பேரிடர் துறை இணைந்து மரத்தை அகற்றினர்.

    Advertisement

    மரம் முழுவதுமாக சாலையில் முறிந்து விழுந்த சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். அந்த மரத்தின் அருகே உள்ள ஒரு வணிகக் கடையில் இருந்து மூன்று பேர் வெளியே வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மரம் திடீரெனச் சாய்வதை நொடிப் பொழுதில் உணர்ந்தனர். உடனடியாக அவர்கள் சுதாரித்துக் கொண்டு பின்னோக்கி ஓடி சென்றனர். இதன் காரணமாக பெரும் விபத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    வீடியோ வைரல்

    ஒரு சில நொடிகளில் மரம் அவர்கள் நின்று கொண்டு இருந்த இடத்தின் மீது விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழுந்த மரத்தை 3 மணி நேரத்திற்குள் முழுமையா அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.தற்போது இந்த விபத்தின் போது பதிவான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மழை காலங்களில் பழைய மற்றும் பலவீனமான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    English Summary

    Coimbatore Huge tree fallen in RS Puram road. 3 people crossed that road luckily escaped. video going viral.