தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்

  • கோவை: தவெக ஆட்சியில் லஞ்சம் ஒழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அரசுத்துறைகளில் ஆய்வுகளில் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் உரிமம் மற்றும் புதுப்பித்தலுக்கான லஞ்சம் தேவையில்லை. அதற்கு பதிலாக தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவித்து, நியாயமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கோவையில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மலைவாழ் மற்றும் கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது அவசியம். பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத ஒரு கிராமத்திற்குப் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியை மற்ற மாநிலங்கள் மட்டுமன்றி பிற நாடுகளை விடச் சிறந்ததாக மாற்றுவதே அரசின் இலக்கு.

    Advertisement

    விளையாட்டுக்கு முக்கியத்துவம்

    அரசுப் பள்ளிகளில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். வாரத்தில் உள்ள 40 பாடவேளைகளில் 8 பாடவேளைகள் புறப்பாடத்திட்டங்களுக்கும், குறிப்பாக உடற்கல்விக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தக் காரணத்தைக் கொண்டும் பி.டி (PT) பாடவேளையை வேறு பாடங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என மிகக் கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சருடன் இணைந்து, தமிழ்நாட்டு மாணவர்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் வகையில் அவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகம் முழுவதும் படிப்படியாக ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரப்படும். முதல் கையெழுத்தே பள்ளிகளில் அடிப்படை வசதிகளான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்கானதுதான். மதுரை தவெக எம்எல்ஏ தன்னுடைய குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளது பாராட்டுக்குரியது. பெற்றோர்களின் விருப்பத்தை மதிக்கும் அதே வேளையில், அரசுப் பள்ளியில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளையும் தனது குழந்தைகளாகவே கருதுகிறேன்.

    Advertisement

    நியாயமான கட்டணம்

    சிங்கப்பெண் திட்டத்திற்காக வெளியிடப்பட்ட ஏஐ வீடியோவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிழைகள் ஏற்பட்டது. இனிவரும் காலங்களில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் காணொளிகள், வரைபடங்கள் மற்றும் ஆடியோக்கள் எதுவாக இருந்தாலும், கட்டாயமாகத் தமிழ் வளர்ச்சித் துறையின் முறையான தணிக்கை மற்றும் ஆலோசனைக்குப் பிறகே வெளியிடப்படும். நிலுவையில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அனைத்தும் முதலமைச்சரின் ஆலோசனையுடன் விரைவில் வழங்கப்படும்.

    மூத்த தமிழறிஞர்கள் மற்றும் மாணவர்களிடம் அரசுப் பேருந்துப் பணியாளர்கள் கூடுதல் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளின் உரிமம் மற்றும் புதுப்பித்தலுக்கான நடைமுறைகள் ஒற்றைச் சாளர முறை மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் எவ்விதமான லஞ்சமும் கொடுக்கத் தேவையில்லை. இதற்குப் பதிலாக, தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவித்து, நியாயமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் .

    Advertisement

    அரசியல் தலையீடு இல்லாமல்

    கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான கட்டணத்தின் பெரும்பகுதியை அரசே செலுத்துவதால், இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தப் பள்ளிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மன்னார்குடி அருகே நடந்த விபத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். பள்ளிகளின் சுற்றளவில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கக் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    தனியார் பள்ளிப் பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. தொலைதூர மற்றும் மலைவாழ் மாணவர்களுக்காகச் சிறப்புப் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பாதுகாப்பான கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் இருப்பதை உறுதி செய்த பிறகே நடப்புக் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கான அங்கீகார அட்டைகள் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி முறைப்படுத்தப்படும்.

    Advertisement

    தமிழ் எங்கள் மூச்சு

    பத்திரிகையாளர்களுக்கான வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் இருமொழிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை. வீட்டில் உறவுகளுடன் பேசத் தாய்மொழியான தமிழும், உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலமும் அவசியம். ஆங்கில வழிக் கல்வியை யார் மீதும் திணிக்க மாட்டோம். தமிழ் மொழிதான் எங்கள் மூச்சு.அரசின் அடிநாதமே 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தத்துவம்தான் " என்றார்.

    English Summary

    Rajmohan: Minister Rajmohan said, Private schools no need to pay fee. For that they should fix proper fee and it should be displayed.