டெல்லி: இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8% வளர்ந்துள்ளதாக மத்திய அரசு கூறியிருந்த நிலையில், அது குறித்து பல பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நம்பர் முக்கியமில்லை என கூறியுள்ள முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், அதை தாண்டி நமது இளைஞர்களுக்கு நாம் எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே முக்கியம் என ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய அரசு வெளியிட்ட டேட்டா பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வளைகுடாவில் இந்தாண்டு தொடக்கம் முதலே நெருக்கடி நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கிறது.
இதன் காரணமாக இந்திய பொருளாதார வளர்ச்சி 6% முதல் 7% வரை குறையலாம் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்த நிலையில், 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் நாமினல் ஜிடிபி வளர்ச்சி 7.8% ஆக பதிவாகியுள்ளது. மத்திய அரசு இது குறித்த விவரங்களை பகிர்ந்துள்ளது. மேலும், பிரதமர் மோடியும் இது குறித்து பெருமிதம் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த வளர்ச்சி புள்ளிவிவரங்கள் குறித்து பல பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முந்தைய ஆண்டின் ஜிடிபி விகிதம் குறைக்கப்பட்டது, மக்களின் செலவழிக்கும் திறன் குறைந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த வரிசையில் பொருளாதார வல்லுநரும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான ரகுராம் ராஜனும் இணைந்துள்ளார். வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து அவர் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இது குறித்து ரகுராம் ராஜன் கூறுகையில், "இந்த வளர்ச்சி புள்ளிவிவரங்கள் உண்மையானதா? அப்படி இல்லையென்றால், இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நிலை குறித்தே சந்தேகம் எழும். பொருளாதாரம் இவ்வளவு வேகமாக வளர்ந்து வருவதாக சொல்கிறார்கள். அப்படி வளர்ந்தால்.. ஏன் அதிக வேலைவாய்ப்புகள், குறிப்பாக நல்ல வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை? முதலீடுகள் ஏன் அதிகரிக்கவில்லை? தொழிலதிபர்கள் ஏன் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர்? அந்நிய நேரடி முதலீடு ஏன் பெரிய அளவில் வரவில்லை? என்பது குறித்து நாம் கவலைப்பட வேண்டும். வளர்ச்சி புள்ளி விவரங்களை பற்றி நாம் விவாதித்து கொண்டே போகலாம். ஆனால், அதைவிட முக்கியமான கேள்வி என்னவென்றால், நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை நாம் எடுக்கிறோமா என்பது தான். இந்தியா வலுவாக உள்ள துறைகளில் தொடர்ந்து முன்னணியில் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோமா என்பதையும் பார்க்க வேண்டும். இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் இல்லை என்றால், நமக்கு அடிப்படையான ஒரு பிரச்சினை உள்ளது என அர்த்தம். இந்தியாவின் அதிக மக்கள் தொகையே நமக்கு பலமாக இருந்து வருகிறது. இதன் மூலமாகவே நாம் பல விஷயங்களில் முன்னிலையில் இருக்கிறோம். அதனால் கிடைக்கும் பலனை நாம் பயன்படுத்தி கொள்ள முக்கியமான தருணம் இது. வேலைவாய்ப்பு சந்தைக்குள் வரும் இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறினால், மக்கள் தொகையால் கிடைக்கும் பலனை நாம் இழக்கும் அபாயம் உள்ளது" என்றார்.பொருளாதார வளர்ச்சி
ரகுராம் ராஜன்
சரமாரி கேள்வி
வேலைவாய்ப்புகள்