டெல்லி: அருணாச்சலப் பிரதேச எல்லையில் பல்வேறு இடங்களில் இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையிலான நேரடி மோதல் சூழல் தொடர்ந்து வருவதாக இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் டிஜி சத்ருஜீத் கபூர் தெரிவித்துள்ளார். வடகிழக்கு எல்லையில் மோதல்கள் தொடர்வதை இந்திய அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்வது இதுவே முதல்முறையாகும்.
இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தை தனது நாட்டின் பகுதி என எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் சொல்லும் சீனா, அந்த பகுதிகளுக்கும் கூட தனது இஷ்டத்திறகு ஏதேதோ பெயர்களை வைத்து வருகிறது. இதனால் எல்லை பகுதிகளில் அவ்வப்போது பதற்றம் ஏற்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் இந்தியா மற்றும் சீன வீரர்களிடையே மோதல் நீடிக்கிறதாம். இதை இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் டிஜி சத்ருஜீத் கபூர் உறுதி செய்திருக்கிறார். பல இடங்களில் இந்த மோதல் நீடிப்பதாக அவர் குறிப்பிட்டார். டெல்லியில் நடைபெற்ற இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை வீரர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய அவர், கடந்த சில காலமாகவே அருணாச்சல பிரதேசத்தின் பல இடங்களில் மோதல் ஏற்பட்டதாகவும், அந்த மோதல் தொடர்ந்து வருவதாகவும் கூறினார். ஜூலை மாதத்தில், தக்சிங் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள முக்கிய ரோந்து புள்ளிகளுக்கு செல்ல இந்திய படைகளுக்கு சீன வீரர்கள் அனுமதி மறுப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இந்த மோதல் சூழல் செப்டம்பரில் டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போதும் நீடித்திருக்கலாம் என தெரிகிறது. அந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பது கடைசி வரை உறுதியாகாமல் இருந்தது. பிரிக்ஸ் மாநாட்டிற்கு 2 நாட்களுக்கு முன்பே சீன அதிபர் வருகை உறுதியானது குறிப்பிடத்தக்கது. இந்தோ-திபெத் எல்லை காவல் படையில் புதிதாக உருவாக்கப்பட்ட சௌர்யா கமாண்டோக்கள் இந்த மோதல் சூழல்களிலும் சிறப்பாக செயல்பட்டதாக கபூர் பாராட்டினார். உயரமான மலை பகுதிகளில் போரிடுவதற்கு இந்த கமாண்டோக்கள் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். 1962ல் உருவாக்கப்பட்ட இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை, சீனாவுடனான 3,488 கிமீ நீள எல்லை கட்டுப்பாட்டு கோட்டை பாதுகாக்கிறது. எல்லை பாதுகாப்பு பணிகளுடன், மலை பகுதிகளை கண்காணிக்கும் பணிகளையும் இந்த படை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்காக எல்லை பிரிவுகளில் ட்ரோன் படைப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கல்வான் போன்ற சூழல்களை எதிர்கொள்ள சிறப்புப் போர் பயிற்சி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அருணாச்சலில் புதிதாக சீன ஆக்கிரமிப்பு எதுவும் நடைபெறவில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியிருந்தாலும், எல்லைக்கு அருகிலுள்ள சில மேய்ச்சல் பகுதிகளுக்கு செல்வதில் சிக்கல் இருப்பதாக உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. சீனாவுடன் மோதல் இருப்பதை உண்மை என இந்தோ-திபெத் எல்லை காவல் படை தலைவர் கூறியதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், எல்லை பதற்றம் குறித்து பிரதமர் மௌனம் காப்பதாக விமர்சித்தார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா புதிய பெயர்களைச் சூட்டுவதையும், 60,000 மெகாவாட் திறன் கொண்ட அணை கட்டும் திட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். டோக்லாம், கிழக்கு லடாக் பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்கு பிறகு, அருணாச்சலப் பிரதேச எல்லையிலும் இந்தியா - சீனா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மத்திய அரசு இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையை புரிந்து கொண்டு, சீனாவுடன் பேச்சுவார்த்தையை நடத்தி பதற்றத்தை தணிக்க வேண்டும் என்பதே இப்போது முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.அருணாச்சல பிரதேசம்
பிரிக்ஸ் மாநாடு
இந்தோ-திபெத் காவல் படை
காங்கிரஸ் கண்டனம்
கோரிக்கை