திண்டுக்கல்: ஆயுத பூஜை பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு பலரும் கடந்த நான்கு நாட்களாக சுற்றுலா சென்றனர். அப்படி சென்னையில் இருந்து சென்றவர்கள் ஒரு ஆப் மூலம் காரை ஒன்றை வாடகைக்கு எடுத்து வந்தனர். அந்த காரை நாயுடுபுரம் பகுதியில் வைத்து மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.
கொடைக்கானல், ஊட்டிக்கு லாங்க் வீக் எண்டில் சுற்றுலா செல்ல வேண்டும்என்பது, சென்னை, பெங்களூரு, கோவை பகுதியில் வேலை செய்யும் பலருக்கும் கனவாக இருக்கிறது. அவர்கள் தங்கள் நண்பர்களுடன் ஜாலியாக கார் எடுத்து சுற்றுலா செல்கிறார்கள். முன்பு எல்லாம் வருடம் ஒரு முறை தான் சுற்றுலா செல்வார்கள். இப்போது எல்லாம் மாதம் மாதம் மலைவாசல் தளங்களை நோக்கி படை எடுக்கிறார்கள்.
இதனால் ஒவ்வொரு வார இறுதியும், ஊட்டியும், கொடைக்கானலும் மூச்சுத்திணறுகிறது. தமிழ்நாட்டில் இப்படி என்றால், வாகமன், தேக்கடி, மூணாறு, வயநாடு போன்ற கேரளாவின் சுற்றுலா தலங்களுமே திணறுகிறது. மனஅழுத்தத்தை குறைக்கும் மருந்தாக மலைவாசல் சுற்றுலா தலங்களை மக்கள் விரும்புகிறார்கள். இது ஒரு வகையில் சுற்றுலாவாக அந்த பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் இயற்கைக்கு வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதேநேரம் சுற்றுலா செல்வோருமே சில நேரங்களில் விசித்திரமான சிக்கல்களை சந்திக்கிறார்கள். சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது நண்பர்கள் 7 பேருடன் கொடைக்கானல் செல்ல ஆசைப்பட்டுள்ளார். இதற்காக 'ஜூம்ஆப்' என்ற ஆப் மூலம் காரை வாடகைக்கு எடுக்க தேடி உள்ளார். அந்த ஆப்பில் சென்னை போரூர் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரிடம் சொகுசு காரை வாடகைக்கு எடுத்தார். கடந்த 17-ந்தேதி இரவு அவர், நண்பர்களுடன் சேர்ந்து அந்த காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் கொடைக்கானலுக்கு வந்தார். பின்னர் அவர்கள் நாயுடுபுரம் அருகே இ.சி.ஜி. சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறைகள் எடுத்து தங்கியிருக்கிறார்கள். நேற்று முன்தினம் காலையில் எழுந்து பார்த்தபோது கார் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சிடைந்தனர். உடனே அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் காரை திருடி செல்வது தெரியவந்தது. இது குறித்து அவர்கள், கொடைக்கானல் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.