துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தை கட்டுப்பாட்டில் எடுக்க இந்திய பைலட்டை ஓமன் துணை விமானி கோடரியால் தாக்கி உள்ளது பயங்கரவாத அட்டாக் தான் என்று ஐக்கிய அரபு அமீரகம் உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி ஓமன் துணை விமானிக்கு கோடரி எப்படி கிடைத்தது என்பது பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
துபாய் - டெல்அவிவ் விமானத்தை கடத்தி அதில் பயணித்த 180 பேரையும் கொல்ல ஓமன் துணை விமானி முயன்ற சம்பவம் பற்றி அடுத்தடுத்து திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் கடந்த30ம் தேதி நடந்த நிலையில் இன்று தான் துணை விமானியின் பெயர் விவரங்கள் வெளியாகி உள்ளன. ஓமன் துணை விமானியின் பெயர் ஹமாம் அல்ஹமாமி. இவர் ஓமன் நாட்டை சேர்ந்தவர். இவரது தந்தை ஓமன் நாட்டை சேர்ந்தவர். தாய் சிரியா நாட்டை சேர்ந்தவர். இவர் ஓமன் குடியுரிமை பெற்றிருந்தாலும் பிறந்தது ஐக்கிய அரபு அமீரகத்தில் தான். அவரது குடும்பம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்தபோது தான் ஹமாம் அல்ஹமாமி பிறந்தார். இவர் தான் துபாய் - டெல்அவிவ் விமானத்தில் இந்திய கேப்டனான பைலட் ஸ்மித் மச்சாரை தாக்கிவிட்டு விமானத்தை கடத்தி அனைவரையும் கொல்ல திட்டமிட்ட நிலையில் பயணிகளால் அது முறியடிக்கப்பட்டது. ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி இதற்கு முன்பு ஓமன் ஏர் விமான நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றினார். அவரது நடவடிக்கை சரியில்லாதது மற்றும் பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில் ஆர்வமாக இருப்பதை அறிந்து அந்த நிறுவனம் அவரை விமானம் இயக்க தடை விதித்தது. நிர்வாக ரீதியான பணியில் அமர்த்தியது. அதன்பிறகு பணி நீக்கம் செய்தது. அதுமட்டுமின்றி ஓமனில் விமானம் இயக்க அதிரடியாக தடை விதித்தது. பிறகு 'மொரோக்கோ' நாட்டின் ராயல் ஏர் மாரோக் நிறுவனத்தில் பணியாற்றினார். 2026 ஜனவரி மாதம் அந்த பணியில் இருந்து வெளியே வந்த ஹமாம் அல் ஹமாமி துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'ஃப்ளைதுபாய்' நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக 'ஃப்ளைதுபாய்' நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தற்போது ஹமாம் அல் ஹமாமியிடம் ஐக்கிய அரபு அமீரகம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் ஓமன் விமானி ஹமாம் அல் ஹமாமியின் செயல் பயங்கரவாத செயல் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அதோடு இந்திய விமானியை அவர் தாக்க காக்பிட் கோடரியை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அட்டார்னி ஜெனரல் கூறியுள்ளதாவது: ''விமானத்தை கட்டுப்பாட்டில் எடுக்க துணை விமானி இந்திய விமானி ஸ்மித் மச்சாரை விமானத்தின் காக்பிட்டில் உள்ள கோடரியால் தாக்கி உள்ளார். இது பயங்கரவாத தாக்குதல் தான். விமானத்தை தனது கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக அவர் இப்படி செய்துள்ளார்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி பயங்கரவாத செயலில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.மேலும் இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். விமானத்தில் எப்படி கோடரி எடுத்து செல்ல முடியும் என்ற வினா எழலாம். ஆனால் உண்மையில் சர்வதேச விமான விதிமுறைகளின்படி ஒவ்வொரு விமானத்தின் காக்பிட்(விமானிகள் அறை) அறையில் Crash Axe இருக்கும். இது எல்லா விமானத்திலும் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 9/11 பயங்கரவாத தாக்குதல் வரை இந்த கோடரி மெயின் கேபினில் இருக்கும். அதன்பிறகு இந்த கோடரி காக்பிட்டிற்கு மாற்றப்பட்டது. ஏதாவது அவசர காலத்தில் இந்த கோடரியை பயன்படுத்தி விமானத்தை உடைத்து பைலட்டுகள் வெளியேறும் வகையில் இந்த கோடரி வைக்கப்பட்டு இருக்கும். இதனை பயன்படுத்தி ஓமன் துணை விமானி இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை தாக்கி உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஐக்கிய அரபு அமீரக அதிபரின் தூதரக விவகாரங்களுக்கான ஆலோசகர் அன்வர் கார்கஷ் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''ப்ளைதுபாய்' விமானத்தின் இந்திய விமானி ஸ்மித் மச்சார் எல்லாவித பாராட்டுகளுக்கும் தகுதியானவர். ஏனென்றால் ஒரு ஆபத்தான பயங்கரவாத செயலில் ஏற்படக்கூடிய பேரழிவை தடுப்பதற்காக அவர் தைரியமாகவும், பொறுப்புணர்வுடனும் செயல்பட்டார். மிகவும் விரும்ப முடியாத சூழலிலும் கூட அவர் தனது தொழில்முறை தன்மையையும், தார்மீக பொறுப்பையும் உணர்ந்து செயல்பட்டுள்ளார். இதுதான் அவரை ஹீரோவாக்கி உள்ளது. நடந்த சம்பவத்தை எளிதாக சுருக்கி விடவோ அல்லது சதி செயல்கள் என்று பிற கருத்துகளை ஏற்று கொண்டு பரப்புவதற்கு பதிலாக பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் அபாயங்களை எதிர்கொள்வதில் விழிப்புணர்வும், எச்சரிக்கையும் தேவையானதாக இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.