ஈரோடு: தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகப்போகிறது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். தவெக அறிவித்த கொள்கைக்கும், அவர்களின் செயல்பாட்டிலும் மாறுபாடு உள்ளது. தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவராக பெரியார் அறிவிக்கப்பட்டார். அவரின் சொந்த ஊரான ஈரோட்டில், பெரியார் பிறந்தநாளுக்கு காலம் காலமாக நடந்த ஊர்வலத்துக்கு, இந்தாண்டு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான செய்தி தவறானது என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி, அவரின் சொந்த ஊரான ஈரோட்டில் விழா கொண்டாடப்படும். திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் இணைந்து, பன்னீர்செல்வம் பூங்காவில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதும் வழக்கம். அப்போது பேரணியாக செல்வார்கள். பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் சேர்ப்பதற்காக பதாகை ஏந்தி ஊர்வலம் மேற்கொள்ளப்படும்.
இந்தாண்டு பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பேரணி செல்ல, திராவிடர் கழகம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு ஈரோடு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதாக திராவிடர் கழக நிர்வாகிகள் சொன்னார்கள். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதால் அனுமதி மறுத்ததாக காவல்துறை சொன்னதாகவும் கூறினார்கள். இது பெரும் சர்ச்சையானது. பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். தங்களின் கொள்கை தலைவர் நிகழ்ச்சிக்கே தவெக அனுமதி மறுத்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், "ஈரோட்டில் வருகின்ற 17.09.2026 ஆம் தேதி நடைபெறவுள்ள தந்தை பெரியாரின் பிறந்த நாள் ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பு என்ற தவறான செய்தி தொலைகாட்சியில் வெளியானது. இன்று 14.09.2026-ம் தேதி ஈரோடு நகர காவல் நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பாக வருகின்ற 17.09.2026-ம் தேதி காலை 10.30 மணிக்கு பெரியார் பிறந்த நாளில் ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்த ஈரோடு நகர காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தனர். காவல் துறையால் மேற்படி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனுமதி மறுப்பு என்பது முற்றிலும் தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது. இதே பதிவு தமிழ்நாடு காவல்துறை பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அனுமதி மறுப்பு என தகவல் வெளியான நிலையில், காவல்துறை அதை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.பெரியார் ஊர்வலம் சர்ச்சை
காவல்துறை விளக்கம்