மிஷின் மேலே டேப் ஒட்டி தில்லுமுல்லு.. ரத்தான மேற்கு வங்கம் 15 பூத்களில் மறு வாக்குப்பதிவு நிறைவு!
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குப்பதிவின் போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில்.. இன்று காலை 7 மணி முதல் டைமண்ட் ஹார்பர் மற்றும் மக்ராஹத் பச்சிம் தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவில் 90% வாக்குகள் பதிவாகியுள்ளன.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் கடந்த 23ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 29ம் தேதியும் நடைபெற்றது. தேர்தலில் 92.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

டேப் ஒட்டி அக்கிரமம்
இதில் 2ம் கட்ட தேர்தலில் ஒருசில வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றன. அதன்படி, திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் நெருங்கிய ஆதரவாளர் ஜஹாங்கீர்கான் தெற்கு 24 பர்கானஸ் மாவட்டம் டைமண்ட் ஹார்பர் தொகுதியில் போட்டியிடுகிறார்..
இந்த தொகுதிக்கு உள்பட்ட பல்டா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தலின்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் பாஜக வேட்பாளரின் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், பாஜக வேட்பாளருக்கு வாக்கு அளிக்க முடியாத வகையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து உடைக்கப்பட்டன..
இன்று 15 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு
சில இயந்திரங்களில் குறிப்பிட்ட சின்னத்தின் பொத்தான்கள் தெரியாதவாறு டேப் ஒட்டி மறைக்கப்பட்டதாக பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் மாறி மாறி புகார்கள் அளிக்கப்பட்டன.. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாக்குச்சாவடியில் முறைகேடு நடைபெற்றதையடுத்து டைமண்ட் ஹார்பர் தொகுதியில் 4 வாக்குச்சாவடிகளிலும், மெக்ராஹட் பட்சிம் தொகுதியில் 11 வாக்குச்சாவடிகளிலும் அதிரடியாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த 15 வாக்குச்சாவடிகளிலும் மறுதேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
பர்கா தொகுதியிலும் புகார்
இந்நிலையில், அந்த இடங்களில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மக்கள் மீண்டும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.. குறிப்பாக தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திற்கு உட்பட்ட இந்த பகுதிகளில் வன்முறை ஏற்படாமல் இருக்க கூடுதல் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.. வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்..
இதேபோல் பல்தா தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்துள்ளன.. அந்த பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை..
அது தொடர்பான ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால்.. பல்தா தொகுதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஏற்கனவே நடந்த வன்முறை சம்பவங்களால் இந்த முறை ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு வீடியோ மூலம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது..
இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பதில் இந்த தொகுதிகளின் முடிவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கை ஜனநாயகத்தை காக்கும் முயற்சி என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. எவ்வித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் முடிந்துள்ளது. மக்கள் அச்சமின்றி நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.. மாலை 6 மணி நிலவரப்படி, 15 வாக்குச்சாவடிகளிலும் ஏறக்குறைய 90 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications