"பயமாக இருக்கு.. எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு சத்தம்!" வளைகுடாவில் சிக்கிய தமிழக மீனவர்கள் கண்ணீர்
தெஹ்ரான்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர்கள் வசித்து வருகிறார்கள். அங்குப் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நமது மீனவர்களை உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் என அவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய கிழக்கில் கடந்த சனிக்கிழமை முதலே மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து கடந்த சனிக்கிழமை ஈரானைத் தாக்கியது. அணு ஆயுத விவகாரம் தொடர்பாக இரு தரப்பிற்கும் பதற்றம் எழுந்ததே இந்த தாக்குதலுக்கு முதல் காரணம்! இதில் இஸ்ரேல்- அமெரிக்கா கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.

இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஒரு பக்கம் இஸ்ரேல் படைகள் மீது ஈரான் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. அதேநேரம் மற்றொரு புறம் மத்திய கிழக்கில் உள்ள பிற அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் மிக மோசமான ஒரு சூழலே நிலவுகிறது.
இதற்கிடையே மத்திய கிழக்குப் பகுதியில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்டு வரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலுக்காகச் சென்ற தமிழக மீனவர்கள், வளைகுடா நாடுகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள். மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்து, மீனவர்களை அழைத்து வரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த, குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலரும் வளைகுடா நாடுகளுக்கு மீன்பிடி தொழிலுக்குச் செல்வது வழக்கம். அதாவது இவர்கள் மற்ற வேலைக்காக வளைகுடா நாடுகளுக்குச் செல்வோரைப் போலவே விசா எடுத்து அங்குச் செல்வார்கள். அங்கு ஒரு பெரிய நிறுவனம் அல்லது முதலாளிக்கா மீன்பிடி தொழிலைச் செய்வார்கள்.
இதுபோல பல நூறு தமிழக மீனவர்கள் வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் தான் இப்போது தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அங்குத் திரும்பிய பக்கமெல்லாம் குண்டுகள் சத்தமே கேட்பதாகவும் இதனால் என்ன செய்வதென்றே புரியாமல் குழப்பத்தில் இருப்பதாகவும் அவர்கள் பிபிசி-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.. தங்களைப் பத்திரமாகத் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications