ஒரே நாளில் டெண்டர்.. வீதிக்கு வந்த முறைகேடு.. 2 அதிகாரிகளை தூக்கியடித்த தமிழக அரசு!
சென்னை: விதிகளை மீறி குறுகிய நேரத்தில் டெண்டர் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. காலை 9 மணிக்கு டெண்டர் கோரப்பட்டு, மாலை 3 மணிக்கே மூடப்பட்டது. ஊரக உள்ளாட்சித்துறை சார்பில் டெண்டர் ஒதுக்கீடு செய்வதில் சர்ச்சை எழுந்ததையடுத்து காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாற்றத்திற்கான அரசியல், தூய்மையான நிர்வாகம் என்ற முழக்கங்களோடு தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், அதற்குள் அரசு நிர்வாகத்தின் மீதான முறைகேடு புகார்கள் எழத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

காஞ்சிபுரத்தில் நடந்துள்ள மின்னல் வேக டெண்டர் முறைகேடு, புதிய அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் மீது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. காலையில் டெண்டர் விடப்பட்டு, மாலையில் ஆணை வழங்கப்பட்டு, ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் துறையில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், கோனேரிக்குப்பம் பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்காக ஊரக உள்ளாட்சித்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டது. கோனேரிகுப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரப்பேட்டை கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்நிலை நீர்தேக்கம் தொட்டி கட்டுமான பணிக்காக ரூ.16 லட்சத்து, 83 ஆயிரத்து 194 மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு இருந்தது.
பொதுவாக ஒரு டெண்டர் அறிவிக்கப்பட்டால், அதற்குப் பல நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு, வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், காலை 9 மணிக்கு தொடங்கப்பட்ட டெண்டர் நடைமுறைகள், யாருக்கும் போதிய அவகாசம் தராமல், அதே நாள் மாலை 3 மணிக்கே அவசர அவசரமாக மூடப்பட்டு, ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. வெறும் 6 மணி நேர இடைவெளியில் டெண்டரை மூடியது மிகப்பெரிய முறைகேடு புகார்களுக்கு வழிவகுத்தது.
யாரோ ஒரு குறிப்பிட்ட நபருக்கு சாதகமாக, டெண்டரை உடனே முடித்து ஒதுக்கீடு செய்யவே இந்த 'மின்னல் வேக' வேலை நடந்துள்ளது என ஒப்பந்ததாரர்கள் மற்றும் உள்ளூர் வட்டாரத்தில் பலத்த புகார்கள் கிளம்பின. அமைச்சர் என்.ஆனந்த் பொறுப்பில் இருக்கும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இந்த டெண்டர் வெளியிடப்பட்ட நிலையில், கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பிய நிலையில், இது குறித்து நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, டெண்டர் ரத்து செய்யப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, உதவி பொறியாளர் கயல்விழி ஆகிய இருவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications