ஃபைலை எடுத்து வரச் சொன்ன தவெக எம்எல்ஏவின் தங்கை? அப்படி நடக்கவில்லையே! ஈரோடு போலீஸ் சொன்ன விளக்கம்!
ஈரோடு: ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆனந்த் மோகனின் சகோதரி பெண் எஸ்பிஐ மிரட்டியதாக வெளியான தகவல் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பெண் எஸ்.பி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எனவும், தனியார் நாளிதழ் தவறான தகவலை அளித்துள்ளாதாக ஈரோடு மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஈரோடு மேற்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆனந்த் மோகன், அண்மையில் பல்வேறு திடீர் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதுமட்டுமல்லாமல், சாலைப் பணிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். புதிய எம்எல்ஏவாக தொகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்ற கருத்தும் அப்பகுதியில் பரவியது.

ஆனந்த் மோகன்
இந்த நிலையில், மாவட்ட குற்றச்செயல்கள் தொடர்பான கோப்புகளை எடுத்துக்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, எம்எல்ஏ முகாம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று ஆனந்த் மோகன் மற்றும் அவரது சகோதரி தரப்பில் ஒரு காவல் அதிகாரி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த தகவல் காவல்துறை வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், "எம்எல்ஏவை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? மாவட்ட ரகசிய கோப்புகளை எதற்காக எடுத்துச் செல்ல வேண்டும்?" என்று எஸ்பி அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
ஈரோடு பெண் எஸ்பி
மேலும், இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு சமரச முயற்சியில் ஈடுபட்டதாகவும் பேசப்பட்டது. அதே நேரத்தில், பெருந்துறை துணை காவல் கண்காணிப்பாளர், எம்எல்ஏவின் குடும்பத்தினரிடம் இது போன்ற செயல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும், அதிகார வரம்புகளை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றும் எச்சரித்ததாக தகவல்கள் வெளியானது.
தவெக எம்எல்ஏ
இதற்கிடையில், ஆனந்த் மோகன் தனது தவறை உணர்ந்து மாவட்ட எஸ்பியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதாகவும், பின்னர் நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததாகவும் சில தகவல்கள் பரவின. ஆனால் இந்த விவகாரம் குறித்து தற்போது ஈரோடு மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், "எம்எல்ஏ மிரட்டல் விடுத்தார், எஸ்பி புகார் அளித்தார் என்ற தகவல்கள் உண்மையல்ல. அப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை. சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு போலீஸ் விளக்கம்
இதுதொடர்பாக வெளியாகியுள்ள விளக்க அறிக்கையில்," ஈரோடு மாவட்டத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு எம்.எல்.ஏ.,-வாக வெற்றி பெற்ற திரு.ஆனந்த் மோகன், மாவட்டம் சார்ந்த குற்ற நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வது சம்மந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை கோப்புகளை எடுத்துக்கொண்டு எம்.எல்.ஏ. முகாம் அலுவலகத்திற்கு வர சொன்னதாக மாவட்ட எஸ். பி அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்ததாகவும், இது சம்மந்தமாக காவல் அதிகாரிகள் எம்.எல்.ஏ-வின் தந்தை கலைச்செல்வன் மூலம் எச்சரித்ததின்படி ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ மாவட்ட எஸ்.பி-யை செல்போனில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதுடன் நேரில் சந்தித்தும் மன்னிப்பு கேட்டதாக 20.05.2026-ம் தேதி தினசரி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கலைவாணி
ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆனந்த மோகன் அவர்களின் சகோதரி கலைவாணி என்பவர் மாவட்ட எஸ்பி அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்திக்க வேண்டும் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு தன்னை அலுவலகத்தில் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என கூறிய நிலையில் நேற்று 19.05.2026 ஆம் தேதி ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து சென்றார்.
எம்.எல்.ஏ-வின் சகோதரி
ஆனால் மேற்படி செய்தியில் தவெக எம்.எல்.ஏ-வின் சகோதரி கோப்புகளை எடுத்துக்கொண்டு எம்.எல்.ஏ-வின் முகாம் அலுவலகத்திற்கு வருமாறு எஸ்பி அவர்களிடம் கூறியதாகவும், இதுகுறித்து மாவட்ட எஸ்பி அவர்கள் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு புகார் தெரிவித்ததாகவும் உண்மைக்கு புறமான செய்தி வெளியிடப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது." என கூறப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications