லக்னோ: உத்தர பிரதேசத்தில் கடந்த மாதம் 13ம் தேதி திறக்கப்பட்ட ரூ.4,200 கோடி மதிப்பிலான கான்பூர் - லக்னோ விரைவுச்சாலையானது மழையின் காரணமாக சேதமடைந்தது. தற்போது அதனை சரிசெய்யும் பணி நடந்து வரும் நிலையில் புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சமயத்தில் ஈரப்பதத்தை உலர வைக்க ராட்சத ஃபேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து தொழில் நகரமான கான்பூரை இணைக்கும் வகையில் கான்பூர் - லக்னோ விரைவுச்சாலை (எக்ஸ்பிரஸ்வே) திட்டம் செயல்படுத்தப்பட்டது. ரூ.4,200 கோடியில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 63 கிலோமீட்டர் தொலைவுக்கு 6 வழிச்சாலையாக இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி திறக்கப்பட்டது. வழக்கமாக கான்பூர் - லக்னோ இடையே பயணிக்க 90 நிமிடங்கள் வரை நேரம் எடுக்கும். ஆனால் இந்த விரைவுச்சாலையால் பயண நேரம் 90 நிமிடங்களில் இருந்து 40 நிமிடங்களாக குறைந்தது. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதில் புதிதாக போடப்பட்ட விரைவுச்சாலையில் சில இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக உன்னாவ் மாவட்டத்தின் கோராரி பகுதியில் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. விரைவுச்சாலை திறக்கப்பட்ட சில வாரங்களிலேயே இப்படி நடந்தது. இதனால் ரூ. 4,200 கோடி மதிப்பிலான இந்த விரைவுச்சாலையின் தரம் குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். இதனால் சாலை பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள், இன்ஜினியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதியில் புதிதாக ஒப்பந்ததாரர் தான் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் அந்த விரைவுச்சாலை சரிசெய்யப்படவில்லை. இதனால் எக்ஸ்பிரஸ் சாலையில் சேதமான பகுதியில் மொத்தமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு இன்னொரு பகுதியில் இருமார்க்கமாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சாலையை மீண்டும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மேற்பார்வையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் மழை பெய்ததால் சாலை போடும் தரைப்பகுதி காயாமல் ஈரமாக உள்ளது. இதனால் சாலை அமைக்கும் பணி சவாலை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் தான் சாலையில் ஈரப்பதத்தை உலர வைக்க ஃபேன் பயன்படு்த்தப்பட்டு வருகிறது. இதற்காக மொத்தம் 10 பெரிய ஃபேன்கள்இயக்கப்பட்டு வருகிறது. ஈரப்பதம் உள்ள இடங்களில் இந்த ஃபேனை ஆன் செய்து சாலையை உலர வைத்து வருகின்றனர். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கேலி, கிண்டல் செய்வதோடு, விமர்சனம் செய்து வருகின்றனர்.